குறுந்தொகை - 98. முல்லை - தலைவி கூற்று
(தலைவன் தான் கூறிச்சென்ற பருவத்தே வாராமையால் வருந்திய தலைவி, “யான் பசலையுற்ற நிலையையும் பருவம் வந்தமையையும் யாரேனும் தலைவரிடம் சென்று அறிவுறுத்தினால் நலமாகும்” என்று தோழிக்குக் கூறியது)
இன்ன ளாயினள் நன்னுதல் என்றவர்த் துன்னச் சென்று செப்புநர்ப் பெறினே நன்றுமன் வாழி தோழிநம் படப்பை நீர்வார் பைம்புதற் கலித்த மாரிப் பீரத் தலர்சில கொண்டே. |
5 |
- கோக்குள முற்றனார். |
தோழி! நம் தோட்டத்திலுள்ள நீர் ஒழுகுகின்ற பசிய புதலினிடத்தே தழைத்துப் படர்ந்த மழைக்காலத்தில் மலரும் பீர்க்கின் மலர்கள் சிலவற்றை கைக்கொண்டு தலைவரை நெருங்கச் சென்று நல்ல நெற்றியையுடைய தலைவி இவ்வலரைப் போன்ற பசலையை அடைந்தாள் என்று அவர்பாற் சொல்லுவாரைப் பெற்றால் மிக்க உதவியாக இருக்கும்.
முடிபு: தோழி-----, பீரத்தலர் சில கொண்டு அவர்த் துன்னச் சென்று இன்னளாயினளென்று செப்புநர்ப்பெறின் நன்றுமன்.
கருத்து: நான் பசலை நோயட நிற்றலைத் தலைவர் அறிந்திலர்; அறியின் வரைவர்போலும்!
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 98. முல்லை - தலைவி கூற்று, தலைவி, இலக்கியங்கள், சென்று, முல்லை, குறுந்தொகை, கூற்று, நன்றுமன், தோழி, சங்க, எட்டுத்தொகை, துன்னச்