குறுந்தொகை - 100. குறிஞ்சி - தலைவன் கூற்று
(தலைவன் பாங்கனுக்கு, “யான் ஒரு மலைவாணர் மகளைக் காமுற்றேன்; அவள் பெறுதற்கரியள்” என்று கூறியது.)
அருவிப் பரப்பின் ஐவனம் வித்திப் பருவிலைக் குளவியொடு பசுமரல் கட்கும் காந்தள் வேலிச் சிறுகுடி பசிப்பிற் கடுங்கண் வேழத்துக் கோடுநொடுத் துண்ணும் வல்வில் ஓரி கொல்லிக் குடவரைப் |
5 |
பாவையின் மடவந் தனளே மணத்தற் கரிய பணைப்பெருந் தோளே. |
|
- கபிலர். |
தோழி! அருவி பாயும் பரந்த நிலத்தில் மலைநெல்லை விதைத்து இடையிலே களையாக முளைத்த பருத்த இலையையுடைய மலைமல்லிகையோடு பசியமரலை களைந்தெறியும் காந்தளையே இயற்கை வேலியாகவுடைய சிற்றூரிலுள்ளார் உணவின்றிப் பசித்தாராயின் தறுகண்மையையுடைய யானையினது கொம்பை விற்று அவ்விலையால் வரும் உணவை உண்ணுதற்கிடமாகிய வலிய வில்லையுடைய ஓரியினது கொல்லிமலையின் மேல்பக்கத்திலுள்ள பாவையைப் போல நான் கண்டு காமுற்ற மகள் மடப்பம் வரப்பெற்றாள்; ஆயினும் அவளுடைய மூங்கிலைப்போன்ற பெரிய தோள்கள் தழுவுதற்கு அரியனவாகும்.
முடிபு: நான் கண்டு காமுற்ற மகள் மடவந்தனள்: அவள் தோள் மணத்தற்கரிய.
கருத்து: என் மனங்கவர்ந்த தலைவி பெறுதற்கரியள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 100. குறிஞ்சி - தலைவன் கூற்று, இலக்கியங்கள், தலைவன், குறிஞ்சி, குறுந்தொகை, கூற்று, காமுற்ற, கண்டு, மகள், சங்க, எட்டுத்தொகை, அவள், நான்