குறுந்தொகை - 97. நெய்தல் - தலைவி கூற்று
(தலைவன் வரையாமல் நெடுநாள் இருப்ப வருந்திய தலைவி, “எம்முடைய நட்பினை யாவரும் அறிந்தனர்: இன்னும் தலைவர் வரையும் முயற்சியை மேற்கொண் டாரல்லர்” என்று கூறியது.)
யானே ஈண்டை யேனே யென்னலனே ஆனா நோயொடு கான லதே துறைவன் தம்மூ ரானே மறையல ராகி மன்றத் ததே. |
|
- வெண்பூதியார். |
தோழி! நான் இவ்விடத்தில் தனியே உள்ளேன்; எனது பெண்மைநலம் என்னின் நீங்கி அமையாத வருத்தத்தோடு கடற்கரைச் சோலையினிடத்தது; தலைவன் தனது ஊரினிடத்துள்ளான்; எம்மிடையே உள்ள மந்தணமாகிய நட்பைப் பற்றிய செய்தியானது பலர் அறியும் பழிமொழியாகி பொதுவிடத்தின்கண் பரவியுள்ளது.
முடிபு: யான் ஈண்டையேன்; என் நலன் கானலஃது; துறைவன் தம்மூரான்; மறை மன்றத்தஃது.
கருத்து: என் நலனுண்ட தலைவர் இன்னும் வரைதற்குரிய முயற்சியைச் செய்தாரல்லர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 97. நெய்தல் - தலைவி கூற்று, இலக்கியங்கள், தலைவி, நெய்தல், குறுந்தொகை, கூற்று, தலைவர், இன்னும், துறைவன், சங்க, எட்டுத்தொகை, தலைவன்