குறுந்தொகை - 90. குறிஞ்சி - தோழி கூற்று
(தலைவன் வரையாமல் நெடுங்காலம் தலைவியோடு பழகியபோது ஒருநாள் அவன் வேலிப்புறத்திலே வந்துநிற்ப அவன் கேட்கும்படி தலைவியை நோக்கிக் கூறுவாளாகி, “தலைவனது கேண்மையினால் நின் மேனிக்கு வாட்டம் நேர்ந்ததேனும் நீ அன்பிற் குறைந்தாயல்லை” என்று தலைவியின் நிலையைத் தோழி புலப்படுத்தியது.)
எற்றோ வாழி தோழி முற்றுபு கறிவளர் அடுக்கத் திரவின் முழங்கிய மங்குல் மாமழை வீழ்ந்தெனப் பொங்குமயிர்க் கலைதொட இழுக்கிய பூநாறு பலவுக்கனி வரையிழி அருவி உண்துறைத் தரூஉம் |
5 |
குன்ற நாடன் கேண்மை மென்தோள் சாய்த்துஞ் சால்பீன் றன்றே. |
|
- மதுரை எழுத்தாளன் சேந்தன்பூதனார். |
தோழி! சூல் முற்றி மிளகுகொடி வளர்கின்ற மலைப்பக்கத்தில் இராக்காலத்தில் முழக்கத்தைச் செய்த மேகத்தினது பெரிய மழைக்கால் வீழ்ந்தனவாக மிக்க மயிரையுடைய ஆண்குரங்கு தீண்டியதனால் நழுவிய மலர்மணத்தை வீசும் பலாப்பழத்தை மலைப்பக்கத்தில் வீழும் அருவியானது நீருண்ணுந் துறையின்கண் கொண்டு வருகின்ற குன்றுகளுள்ள நாட்டையுடைய தலைவனது நட்பு நின் மெல்லிய தோள்களை மெலியச் செய்தும் அமைதியைத் தந்தது இஃது எத்தகையது!
முடிபு: தோழி, குன்றநாடன் கேண்மை தோள் சாய்த்தும் சால்பு ஈன்றன்று; இஃது எற்றோ!
கருத்து: நீ மெலிந்தாயாயினும் இயல்பு வேறுபட்டாயல்லை.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 90. குறிஞ்சி - தோழி கூற்று, தோழி, இலக்கியங்கள், கூற்று, குறுந்தொகை, குறிஞ்சி, கேண்மை, மலைப்பக்கத்தில், இஃது, எற்றோ, அவன், எட்டுத்தொகை, சங்க, நின்