குறுந்தொகை - 89. மருதம் - தோழி கூற்று
(தலைவி தலைவன் பெயரை வள்ளைப்பாட்டில் அமைத்துப் பாடினாளாக, அதனைக் கேட்ட ஊரினர் அலர் தூற்றுதலைத் தோழி தலைவன் சிறைப்புறத்திலிருக்கும் பொழுது புலப்படுத்தி, விரைவில் வரைதல் நலமென்பதை உணர்த்தியது.)
பாவடி உரல பகுவாய் வள்ளை ஏதின் மாக்கள் நுவறலும் நுவல்ப அழிவ தெவன்கொலிப் பேதை யூர்க்கே பெரும்பூண் பொறையன் பேஎமுதிர் கொல்லிக் கருங்கண் தெய்வம் குடவரை யெழுதிய |
5 |
நல்லியற் பாவை அன்னஇம் மெல்லியற் குறுமகள் பாடினள் குறினே. |
|
- பரணர். |
பெரிய அணிகலத் தையுடைய சேரனுக்குரிய அச்சந்தருதல் மிக்க கொல்லிமலையிலுள்ள கரிய கண்களையுடைய தெய்வம் அம் மலையின் மேற்குப் பக்கத்தில் எழுதிய நல்ல இயலையுடைய பாவையை ஒத்த இந்த மெல்லிய இயல்பையுடைய தலைவி தலைவனுடைய பெயரைப் பாடி இடிப் பாளாயின் அங்ஙனம் அவள் பரந்த அடியினையுடைய உரலினது பகுவாயிடத்துத் தானியம் இடிக்கும் பொழுது பாடும் வள்ளைப் பாட்டைக் குறித்து அயலார்கள் குறை கூறுதலையும் செய்வார்கள்; இத்தகைய அறிவின்மையையுடைய ஊரினர் கூறும் சொற்களின் பொருட்டு வருந்துதலாற் பயன் யாது?
முடிபு: குறுமகள் பாடினள் குறின், மாக்கள் நுவல்ப; இப்பேதை யூர்க்கு அழிவது எவன்கொல்?
கருத்து: ஊரினர், தலைவி ஒரு தலைவன்பால் நட்புடையளென்பதை அறிந்துகொண்டனர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 89. மருதம் - தோழி கூற்று, இலக்கியங்கள், தோழி, மருதம், ஊரினர், தலைவி, கூற்று, குறுந்தொகை, தெய்வம், பாடினள், குறுமகள், நுவல்ப, பொழுது, எட்டுத்தொகை, தலைவன், சங்க, மாக்கள்