குறுந்தொகை - 87. குறிஞ்சி - தலைவி கூற்று
(தலைவன் தெய்வங் காட்டிச் சூளுற்றுப் பின் பிரிந்து நீட்டித்தானாக, அத்தெய்வம் ஒறுக்குமோவென்று அஞ்சிய தலைமகள், “என்பால் உண்டான வேறுபாடுகளுக்குக் காரணம் தலைவர் கொடுமையன்று; என் மனநிலையேயாகும்” என்று கூறியது.)
மன்ற மராஅத்த பேஎமுதிர் கடவுள் கொடியோர்த் தெறூஉம் என்ப யாவதும் கொடியர் அல்லரெங் குன்றுகெழு நாடர் பசைஇப் பசந்தன்று நுதலே ஞெகிழ ஞெகிழ்ந்தன்று தடமென் தோளே. |
5 |
- கபிலர். |
பொதுவிடத்திலுள்ள மராத் தின்கண் தங்கும் பிறர்க்கு அச்சம் செய்தல் முதிர்ந்த தெய்வம் கொடுமை யுடையாரை வருத்தும் என்று அறிந்தோர் கூறுவர்; குன்றுகள் பொருந்திய நாட்டையுடைய எம் தலைவர் சிறிதும் அத்தெய்வத்தால் ஒறுத்தற்குரிய கொடுமையை யுடையரல்லர்; என்நெற்றி நான் அவரை விரும்பியதனால் பசலை பெற்றது; என் மனம் அவர் திறத்து ஞெகிழ்ந்தமையால் பரந்த மெல்லிய என் தோள் மெலிவுற்றது.
முடிபு: கடவுள் கொடியோரைத் தெறூஉம் என்ப; எம் நாடர் கொடியர் அல்லர்; என்நுதுல் பசைஇப் பசந்தன்று; ஞெகிழத் தோள் ஞெகிழ்ந்தன்று.
கருத்து: என்பால் உண்டான வேறுபாடுகளுக்குத் தலைவர் காரணரல்லர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 87. குறிஞ்சி - தலைவி கூற்று, இலக்கியங்கள், குறிஞ்சி, குறுந்தொகை, தலைவர், தலைவி, கூற்று, நாடர், பசைஇப், பசந்தன்று, ஞெகிழ்ந்தன்று, தோள், கொடியர், தெறூஉம், சங்க, உண்டான, கடவுள், எட்டுத்தொகை, என்ப