குறுந்தொகை - 84. பாலை - செவிலி கூற்று
(தலைவி தமரைப் பிரிந்து தலைவனுடன் சென்றாளாக, அதனை யறிந்த செவிலி, “யான் நேற்று வழக்கம்போல் தழுவவும் அதனை என் மகள் வெறுத்தாள்; அதன் காரணத்தை அப்பொழுதே அறிந்திலேன்; இப்பொழுது அறிந்தேன்” என்று கூறி இரங்கியது.)
பெயர்த்தனென் முயங்கயான் வியர்த்தனென் என்றனள் இனியறிந் தேனது துனியா குதலே கழல்தொடி ஆஅய் மழைதவழ் பொதியில் வேங்கையும் காந்தளும் நாறி ஆம்பல் மலரினும் தான்தண் தணியளே. |
5 |
- மோசிகீரனார். |
உழல இட்ட தோள் வளையையுடைய ஆயென்னும் வள்ளலது மேகங்கள் தவழும் பொதியின் மலையில் உண்டான வேங்கை மலரினது மணத்தையும் காந்தள் மலரினது மணத்தையும் வீசி ஆம்பல் மலரைக் காட்டிலும் குளிர்ச்சியையுடையளாகிய என்மகள் யான் ஒருமுறை தழுவிய தோடமையாமல் மீட்டும் தழுவும் காலத்து நான் வியர்வையையடைந்தேன் என்று கூறினாள்; அங்ஙனம் யான் தழுவியது அவளுக்கு வெறுப்புண்டாக்குதற்குக் காரணமாதலை அவள் கூறிய அக்காலத்தே அறிந்திலேனாயினும் இப்பொழுது அறிந்தேன்.
முடிபு: தண்ணியள், யான் முயங்க வியர்த்தனென் என்றனள்; அது துனியாகுதலை இனி அறிந்தேன்.
கருத்து: தலைவி எம்பால் வெறுப்புற்று ஒரு தலைவன்பால் விருப்புற்றுச் சென்றனள்; இதனை முன்னரே அறிந்திலன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 84. பாலை - செவிலி கூற்று, இலக்கியங்கள், செவிலி, யான், பாலை, குறுந்தொகை, கூற்று, மணத்தையும், மலரினது, அறிந்தேன், ஆம்பல், தலைவி, எட்டுத்தொகை, சங்க, இப்பொழுது, வியர்த்தனென், என்றனள்