குறுந்தொகை - 78. குறிஞ்சி - பாங்கன் கூற்று
(தலைவனது வேறுபாட்டுக்குக் காரணம் அவன் ஒருத்திபாற் கொண்ட காமமேயென்பதனை உணர்ந்து, “காமம் தகுதியில்லாரிடத்தும் செல்வதாதலின் அது மேற்கொள்ளத் தக்கதன்று” என்று பாங்கன் இடித்துரைத்தது.)
பெருவரை மிசையது நெடுவெள் ளருவி முதுவாய்க் கோடியர் முழவின் ததும்பிச் சிலம்பின் இழிதரும் இலங்குமலை வெற்ப நோதக் கன்றே காமம் யாவதும் நன்றென உணரார் மாட்டும் |
5 |
சென்றே நிற்கும் பெரும்பே தைமைத்தே. | |
- நக்கீரனார். |
பெரிய மலையின் உச்சியிலுள்ளதாகிய நெடிய வெள்ளிய அருவியானது அறிவு வாய்த்தலையுடைய கூத்தரது முழவைப்போல ஒலித்து பக்கமலையின்கண் வீழும் விளங்குகின்ற மலைகயையுடைய தலைவ காமமானது சிறிதும் இது நன்மையென உணரும் அறிவில்லா தாரிடத்தும் சென்று தங்குகின்ற பெரிய அறிவின்மையையுடையது; ஆதலின் அது வெறுக்கத்தக்கது.
முடிபு: வெற்ப, காமம் பெரும்பேதைமைத்து; நோதக்கன்று.
கருத்து: நீ ஒருத்திபாற் கொண்ட காமத்தை ஒழிவாயாக.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 78. குறிஞ்சி - பாங்கன் கூற்று, இலக்கியங்கள், பாங்கன், குறிஞ்சி, குறுந்தொகை, கூற்று, காமம், வெற்ப, பெரிய, சங்க, எட்டுத்தொகை, ஒருத்திபாற், கொண்ட