குறுந்தொகை - 77. பாலை - தலைவி கூற்று
(தலைவனது பிரிவை ஆற்றாளாகிய தலைவி தோழியை நோக்கி, “வழிப்போவார் இறத்தற்குக் காரணமாகிய வெம்மையையுடைய பாலை நிலத்தின் ஏதத்தை நினைந்து என் தோள்கள் தலைவர்திறத்து மெலிந்தன” என்று கூறியது.)
அம்ம வாழி தோழி யாவதும் தவறெனின் தவறோ இலவே வெஞ்சுரத்து உலந்த வம்பலர் உவலிடு பதுக்கை நெடுநல் யானைக் கிடுநிழ லாகும் அரிய கானஞ் சென்றோர்க்கு |
5 |
எளிய வாகிய தடமென் தோளே. | |
- மதுரை மருதன் இளநாகனார். |
தோழி! ஒன்று சொல்வேன்; கேட்பாயாக; வெவ்விய அருவழியில் இறந்த வழிப்போக்கர்களுடைய உடலை மறைத்த தழையைச் செயற்கையாக இட்ட குவியலானது உயர்ந்த நல்ல யானைக்கு இட்ட நிழலைத் தருதற்குரிய பொருளாகப் பயன்படும் கடத்தற்கரிய பாலைநிலத்தில் என்னைப் பிரிந்து சென்று தலைவர்திறத்து மெலிந்தவனவாகிய பரந்த மெல்லிய என்தோள்கள் தவறுடையனவென்று கூறின் சிறிதும் தவறு இல்லாதன.
முடிபு: தோழி, கானம் சென்றோர்க்கு எளியவாகிய தோள்கள் தவறு இல.
கருத்து: தலைவர் சென்ற பாலையினது ஏதத்தைக் கருதி என் தோள்கள் மெலிந்தன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 77. பாலை - தலைவி கூற்று, பாலை, இலக்கியங்கள், தலைவி, கூற்று, தோழி, தோள்கள், குறுந்தொகை, இட்ட, தவறு, சென்றோர்க்கு, சங்க, தலைவர்திறத்து, எட்டுத்தொகை