குறுந்தொகை - 72. குறிஞ்சி - தலைவன் கூற்று
(தலைவியோடு அளவளாவி வந்த தலைமகன்பாற் காணப்பட்ட வேறுபாடுகளை நோக்கி, "இவை நினக்கு எதனால் வந்தன?" என வினவிய பாங்கனுக்கு, "மலைச்சாரலிலுள்ளதொரு தினைப்புனத்திற் குருவியோட் டுவாளொரு மகளது அழகு கண்டு மயங்கி யான் இக்காம நோயுற்றேன்" என்று கூறியது.)
பூவொத் தலமருந் தகைய ஏவொத்து எல்லாரும் அறிய நோய்செய் தனவே தேமொழித் திரண்ட மென்தோள் மாமலைப் பரீஇ வித்திய ஏனற் குரீஇ ஓப்புவாள் பெருமழைக் கண்ணே. |
5 |
- மள்ளனார். |
இனிய மொழியினையும் பருத்த மெல்லிய தோளினையும் உடைய பருத்தியை இடையிலே விதைத்த தினைமுதிர்ந்த புனத்தின்கண் அத்தினையை உண்ணவரும் குருவியினங்களை ஓட்டு கின்றவளது பெரிய குளிர்ச்சியையுடைய கண்கள் பூவினை அழகில் ஒத்துச் சுழலுந் தன்மையை யுடையன; ஆயினும் கொடிய தொழிலால் அம்பினை ஒத்து நின்னைப் போன்ற யாவரும் என்னுடைய வேறுபாட்டை அறியும்படி எனக்குத் துன்பத்தை உண்டாக்கின.
முடிபு: குரீஇ ஓப்புவாள் கண் நோய் செய்தன.
கருத்து: நான் ஒரு மலைவாணர் மகள்பால் நட்பு பூண்டு காமநோய் உற்றேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 72. குறிஞ்சி - தலைவன் கூற்று, இலக்கியங்கள், குறிஞ்சி, குறுந்தொகை, தலைவன், கூற்று, குரீஇ, ஓப்புவாள், எட்டுத்தொகை, சங்க