குறுந்தொகை - 71. பாலை - தலைவன் கூற்று
(பொருளை ஈட்டுதற்பொருட்டுத் தலைவியைப் பிரிய எண்ணிய நெஞ்சை நோக்கி, "இத்தலைவி நம் காமநோய்க்கு மருந்தும், இன்பம் பெறுதற்குச் செல்வமும் ஆதலின் இவளைப் பிரிதல் இயலாது" என்று தலைவன் கூறியது.)
மருந்தெனின் மருந்தே வைப்பெனின் வைப்பே அரும்பிய சுணங்கின் அம்பகட் டிளமுலைப் பெருந்தோள் நுணுகிய நுசுப்பிற் கல்கெழு கானவர் நல்குறு மகளே. |
|
- கருவூர் ஓதஞானியார். |
நெஞ்சே! தோற்றிய தேமலையுடைய அழகிய பெருமையையுடைய இளைய நகிலையும் பெரிய தோளையும் நுண்ணிதாகிய இடையையும் உடைய கற்கள் பொருந்திய காட்டையுடையவர் பெற்ற மகள் காமநோய்க்குப் பரிகாரம் வேண்டுமென்று கருதுங்கால் எனக்குப் பரிகாரமாவாள்; போகம் நுகரச் செல்வம் வேண்டுமென்று கருதின் எனக்குச் செல்வமுமாவாள்.
முடிபு: மகள், மருந்தெனின் மருந்து; வைப்பெனின் வைப்பு.
கருத்து: இவளைப் பிரிந்து பெறும் செல்வம் வேறொன்று இல்லை.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 71. பாலை - தலைவன் கூற்று, தலைவன், இலக்கியங்கள், கூற்று, குறுந்தொகை, பாலை, மகள், வேண்டுமென்று, செல்வம், வைப்பெனின், இவளைப், எட்டுத்தொகை, சங்க, மருந்தெனின்