குறுந்தொகை - 66. முல்லை - தோழி கூற்று
(கார்காலம் வந்தபின்பும் தலைவன் வாராமையால் வருந்திய தலைவியை நோக்கி, "இப்போது பெய்யும் மழை பருவமல்லாத காலத்துப் பெய்வது; இதைக் கார்காலத்துக்குரியதென்று மயங்கிக் கொன்றை மரங்கள் மலர்ந்தன. ஆதலின் இது கார்ப்பருவமென்று நீ வருந்தற்க" என்று தோழி கூறியது.)
மடவ மன்ற தடவுநிலைக் கொன்றை கல்பிறங் கத்தஞ் சென்றோர் கூறிய பருவம் வாரா அளவை நெரிதரக் கொம்புசேர் கொடியிணர் ஊழ்த்த வம்ப மாரியைக் காரென மதித்தே. |
5 |
- கோவர்த்தனார். |
கற்கள் விளங்கும் பாலைநிலத்து அருவழியைக் கடந்து சென்ற தலைவர் மீண்டு வருவேனென்று சுட்டிக் கூறிய கார்ப்பருவம் வாராத காலத்திலே பருவமல்லாத காலத்துப் பெய்யும் மழையை கார் காலத்து மழையென்று கருதி நெருங்கும்படி சிறு கொம்புகளிற் சேர்ந்த ஒழுங்காகிய பூங்கொத்துக்களைப் புறப்பட விட்டன; ஆதலின் பரந்த அடியையுடைய கொன்றை மரங்கள் நிச்சயமாக பேதைமையையுடைய.
முடிபு: பருவம் வாரா அளவை வம்பமாரியைக் காரென மதித்து இணர் ஊழ்த்த; அதனாற் கொன்றை மடவ.
கருத்து: இது கார்ப்பருவம் அன்று; ஆதலின் நீ வருந்தற்க.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 66. முல்லை - தோழி கூற்று, இலக்கியங்கள், கொன்றை, தோழி, கூற்று, முல்லை, ஆதலின், குறுந்தொகை, பருவம், வாரா, ஊழ்த்த, கார்ப்பருவம், காரென, கூறிய, அளவை, மரங்கள், சங்க, எட்டுத்தொகை, பெய்யும், பருவமல்லாத, காலத்துப், வருந்தற்க