குறுந்தொகை - 45. மருதம் - தோழி கூற்று
(பரத்தையர்பாற் சென்ற தலைவன் விட்ட தூதுவர் தலைவியினது உடம்பாட்டை வேண்டியபொழுது, தலைவி உடம்பட்டாளென்பதை யறிந்து தோழி, “தலைவன் கொடுமை தன்னைத் துன்புறுத்தவும் அதனைப் பாராட்டாமல் உடம்படுதற்குரிய இக்குடியிற் பிறத்தல் கொடிது” என்று கூறிக் குறிப்பினால் தலைவியின் உடம்பாட்டைத் தெரிவித்தது.)
காலை யெழுந்து கடுந்தேர் பண்ணி வாலிழை மகளிர்த் தழீஇய சென்ற மல்ல லூரன் எல்லினன் பெரிதென மறுவருஞ் சிறுவன் தாயே தெறுவ தம்மவித் திணைப்பிறத் தல்லே. |
5 |
- ஆலங்குடி வங்கனார். |
காலையிற் புறப்பட்டு விரைந்து செல்லும் தேரை ஏறுதற்கேற்ப அமைத்து தூய அணிகலன்களை அணிந்த பரத்தையரை தழுவும் பொருட்டுச் சென்ற வளப்பம் பொருந்திய ஊரையுடைய தலைவன் மிக்க விளக்கத்தை யுடையவனென்றெண்ணி ஆண்மகப் பெற்ற தலைவி அவனை ஏற்றுக் கொள்வாளாயினும் மனம் சுழலுவாள்; மனம் சுழலுதற்குரிய செயலைத் தலைவன் செய்யினும் அதனை மறந்து வாயில் நேர்தற்குரிய இக்குடியிற் பிறத்தல் துன்புறுத்துவதாகும்.
முடிபு: சிறுவன் தாய் ஊரன் எல்லினனென மறுவரும்; இத்திணைப் பிறத்தல் தெறுவது.
கருத்து:தலைவி கற்பொழுக்கமுடைய குடியிற் பிறந்தாளாதலின் தலைவனை ஏற்றுக் கொள்வாள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 45. மருதம் - தோழி கூற்று, இலக்கியங்கள், தோழி, மருதம், தலைவன், பிறத்தல், தலைவி, சென்ற, கூற்று, குறுந்தொகை, மனம், ஏற்றுக், சிறுவன், இக்குடியிற், எட்டுத்தொகை, சங்க