குறுந்தொகை - 43. பாலை - தலைவி கூற்று
(தலைவன் பிரிந்த காலத்தில், “அவர் பிரிவாரென்று சிறிதும் கருதாமையின் நான் சோர்ந்திருந்தேன்; அக்காலத்து அவர்தம் பிரிவைக் கூறின் யான் ஆற்றேனென எண்ணிச் சொல்லாமற் போயினார். இதனை நினைந்து என் நெஞ்சம் வருந்தும்” என்று இரங்கித் தலைவி கூறியது.)
செல்வார் அல்லரென் றியானிகழ்ந் தனனே ஒல்வாள் அல்லளென் றவரிகழ்ந் தனரே ஆயிடை, இருபே ராண்மை செய்த பூசல் நல்லராக் கதுவி யாங்கென் அல்லல் நெஞ்சம் அலமலக் குறுமே. |
5 |
- அவ்வையார். |
தோழி! யான! தலைவர் நம்மைப் பிரிந்து செல்லாரென்று எண்ணி அவர் செலவை விலக்காமற் சோர்ந்திருந்தேன்; அவர் நம் பிரிவை இவளுக்கு அறிவித்தால் அதற்கு இவள் உடம்படாளென்று எண்ணி என்னிடம் சொல்லுதலினின்றும் சோர்ந்தனர்; அக்காலத்தே இருவரிடத்துமுள்ள இரண்டு பெரிய ஆண்மைகள் செய்த போரினால் எனது துன்பத்தையுடைய நெஞ்சு நல்லபாம்பு கவ்விக் கடித்ததனால் வருத்தப்படுவதைப் போல இப்பொழுது மிக்க கலக்கத்தையடையா நின்றது.
முடிபு: செல்வா ரல்லரென்று யான் இகழ்ந்தேன்; ஒல்வாளல்ல ளென்று அவர் இகழ்ந்தனர்; ஆயிடைச் செய்த பூசலால் என் நெஞ்சம் அலமலக்குறும்.
கருத்து: தலைவர் என்னிடம் சொல்லாமற் பிரிந்தமையின் நான் கலங்குவேனாயினேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 43. பாலை - தலைவி கூற்று, இலக்கியங்கள், தலைவி, பாலை, செய்த, நெஞ்சம், அவர், கூற்று, குறுந்தொகை, எண்ணி, தலைவர், என்னிடம், சோர்ந்திருந்தேன், எட்டுத்தொகை, சங்க, நான், யான், சொல்லாமற்