குறுந்தொகை - 42. குறிஞ்சி - தோழி கூற்று
(இரவில் வந்து தலைவியோடு பழகவேண்டுமென்று விரும்பிய தலைவனை நோக்கி, “நெருங்கிப் பழகாவிடினும் நும் நட்பு அழியாது” என்று குறிப்பால் தோழி மறுத்தது.)
காமம் ஒழிவ தாயினும் யாமத்துக் கருவி மாமழை வீழ்ந்தென அருவி விடரகத் தியம்பு நாடவெம் தொடர்புந் தேயுமோ நின்வயி னானே. |
|
- கபிலர். |
நடு இரவின் கண் தொகுதியையுடைய பெரிய மழை பெய்தலால் நீர் பெருகி அதனால் அருவியானது பின்நாளிலும் மலைமுழைஞ்சுகளில் ஒலிக்கும் குறிஞ்சி நிலத்தையுடையவனே காமமானது நீங்குவதாக இருப்பினும் நின்னிடத்தில் எமக்குள்ள நட்பும் அழியுமோ? அழியாது.
முடிபு: நாட, காமம் ஒழிவதாயினும் நின்வயினான் எம் தொடர்பும் தேயுமோ?
கருத்து: நீ இரவில் வாராவிடினும் தலைவிக்கும் நினக்கும் உள்ள நட்பு அழியாது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 42. குறிஞ்சி - தோழி கூற்று, இலக்கியங்கள், தோழி, குறிஞ்சி, குறுந்தொகை, கூற்று, தேயுமோ, காமம், அழியாது, சங்க, எட்டுத்தொகை, இரவில், நட்பு