குறுந்தொகை - 398. பாலை - தலைவி கூற்று
(தலைவனது பிரிவைத் தலைவிக்கு உணர்த்திய தோழி, “உலகிலுள்ள மகளிர் தம் தலைவர் வினைமுடித்து வருமளவும் ஆற்றியிருப்பார்” என்று உலகின்மேல் வைத்துக்கூறி, “நீ ஆற்றல் வேண்டும்” என்பதை அறிவுறுத்தினாளாக, “நம்மை அறிவுறுத்துவாரையன்றி நம்துயரைப் போக்குவாரைக் கண்டிலேம்” என்று தலைவி கூறியது.)
தேற்றா மன்றே தோழி தண்ணெனத் தூற்றுந் துவலைத் துயர்கூர் காலைக் கயலே ருண்கட் கனங்குழை மகளிர் கைபுணை யாக நெய்பெய்து மாட்டிய சுடர்துய ரெடுப்பும் புன்கண் மாலை |
5 |
அரும்பெறற் காதலர் வந்தென விருந்தயர்பு மெய்ம்மலி யுவகையி னெழுதரு கண்கலி ழுகுபனி யரக்கு வோரே. |
|
- பாலைபாடிய பெருங்கடுங்கோ. |
தோழி! குளிர்ச்சி உண்டாகும்படி தூவுகின்ற மழைத் துளியையுடைய துயரம் மிக்க பொழுதில் கயலை ஒத்த மையுண்ட கண்களையும் கனத்தை யுடைய குழையையுமுடைய மகளிர் தம் கையே கருவியாக நெய்யை வார்த்து ஏற்றிய விளக்கு துயரத்தை எழுப்புகின்ற மாலைக்காலத்தில் பெறுதற்கரியதலைவர் வந்தாராக விருந்து செய்து உடம்பு பூரிக்கும் மகிழ்ச்சியோடு முன் எழுந்த கண் கலங்கியதால் வீழ்கின்ற நீர்த்துளியை துடைப்போரை அறியேம்.
முடிபு: தோழி, மாலையில் காதலர் வந்தென அயர்பு பனி அரக்குவோரைத் தேற்றாம்.
கருத்து: என் துன்பமறிந்து அதனைப் போக்குவாரைக் காணேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 398. பாலை - தலைவி கூற்று, தோழி, இலக்கியங்கள், தலைவி, பாலை, குறுந்தொகை, கூற்று, மகளிர், வந்தென, காதலர், சங்க, எட்டுத்தொகை, போக்குவாரைக்