குறுந்தொகை - 397. நெய்தல் - தோழி கூற்று
(வரைவிடைவைத்துப் பொருள்வயிற் பிரியப்புக்க தலைவனைநோக்கி, “தலைவி நின் தண்ணளியால் வாழும் நிலையினள்; ஆதலின் விரைவில் மீண்டு வருவாயாக” என்பதுபடத் தோழி சொல்லியது.)
நனைமுதிர் ஞாழற் தினைமருள் திரள்வீ நெய்தல் மாமலர்ப் பெய்தல் போல ஊதை தூற்றும் உரவுநீர்ச் சேர்ப்ப தாயுடன் றலைக்கும் காலையும் வாய்விட் டன்னா வென்னுங் குழவி போல |
5 |
இன்னா செயினும் இனிதுதலை யளிப்பினும் நின்வரைப் பினளென் தோழி தன்னுறு விழுமங் களைஞரோ இலளே. |
|
- அம்மூவனார். |
அரும்புகள் முதிர்ந்த ஞாழலினது முட்டையைப் போன்ற திரண்ட மலர்களை நெய்தலது கரிய மலரிலே பெய்வதைப்போல குளிர்காற்றுத் தூவுகின்ற வன்மையையுடைய கடற்கரைக்குத் தலைவ தாய் மாறுபட்டு வருத்திய பொழுதும் வாய்திறந்துஅன்னையே என்று அழும் குழந்தையைப் போல என் தோழியாகிய தலைவி நீ இன்னாதவற்றைச்செய்தாலும் இனிதாகத் தலையளி செய்தாலும் நின்னாற் புரக்கப்படும் எல்லைக்கு உட்பட்டவள்; நின்னையன்றித் தனது மிக்கதுன்பத்தை நீக்குவாரைப் பெற்றிலள்.
முடிபு: சேர்ப்ப, இன்னாசெயினும் இனிது தலையளிப்பினும் என் தோழி நின்வரைப்பினள்; விழுமம் களைஞர் இலள்.
கருத்து: நீ தலைவியினது துன்பங்கருதி விரைவில் வருவாயாக.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 397. நெய்தல் - தோழி கூற்று, தோழி, இலக்கியங்கள், நெய்தல், குறுந்தொகை, கூற்று, சேர்ப்ப, விரைவில், எட்டுத்தொகை, சங்க