குறுந்தொகை - 393. மருதம் - தோழி கூற்று
(தலைவன் சிறைப்புறத்தே நிற்ப, “தலைவன் நின்னோடு பழகியகாலம் சிறிதாயினும் அது குறித்து எழுந்த அலர் பெரிதாயிற்று” என்றுதலைவிக்குக் கூறுவாளாய்த் தோழி வரைவின் இன்றியமையாமையை உணர்த்தியது.)
மயங்குமலர்க் கோதை குழைய மகிழ்நன் முயங்கிய நாடவச் சிலவே அலரே கூகைக் கோழி வாகைப் பறந்தலைப் பசும்பூண் பாண்டியன் வினைவ லதிகன் களிறொடு பட்ட ஞான்றை |
5 |
ஒளிறுவாட் கொங்கர் ஆர்ப்பினும் பெரிதே. | |
- பரணர். |
தலைவன் விராவிய மலரையுடைய நின் மாலை குழையும்படி அணைந்த நாட்கள் மிகச் சிலவாகும் பழிமொழியோ கோட்டானாகிய கோழியையுடைய வாகை யென்னுமிடத்துள்ள போர்க்களத்தில் பசிய பூணையணிந்த பாண்டியனதுஏவலிலே வல்ல அதிகன் தனது யானையோடு பட்ட காலத்தில் விளங்குகின்ற வாட்படையையுடைய கொங்கர்களுடைய வெற்றியாலுண்டாகிய ஆரவாரத்தினும் மிக்கது.
முடிபு: மகிழ்நன் முயங்கிய நாள் சிலவே; அலர்ஆர்ப்பினும் பெரிது.
கருத்து: அலர் மிக்கது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 393. மருதம் - தோழி கூற்று, தோழி, இலக்கியங்கள், கூற்று, குறுந்தொகை, மருதம், சிலவே, பட்ட, மிக்கது, முயங்கிய, தலைவன், எட்டுத்தொகை, சங்க, அலர், மகிழ்நன்