குறுந்தொகை - 391. முல்லை - தலைவி கூற்று
(பிரிவிடைப் பருவவரவின்கண் ஆற்றாளென வருந்திய தோழியை நோக்கி, “கார்காலம் வந்தது; மயில்கள் கூவின; அவை பேதைமையுடையன போலும்” என்று தலைவி கூறியது.)
உவரி யொருத்தல் உழாது மடியப் புகரி புழுங்கிய புயனீங்கு புறவிற் கடிதிடி உருமிற் பாம்புபை அவிய இடியொடு மயங்கி இனிதுவீழ்ந் தன்றே வீழ்ந்த மாமழை தழீஇப் பிரிந்தோர் |
5 |
கையற வந்த பையுள் மாலைப் பூஞ்சினை யிருந்த போழ்கண் மஞ்ஞை தாஅம் நீர் நனந்தலை புலம்பக் கூஉந் தோழி பெரும்பே தையவே. |
|
- பொன்மணியார். |
தோழி! எருதானது வெறுத்து உழாமல் சோம்பிக்கிடக்கும்படி மான் வெம்மையோடு கிடந்த மழை நீங்கிய முல்லைநிலத்தில் விரைந்து இடிக்கும் உருமேற்றினால்பாம்புகளின் படம் அழிய இடியோடு கலந்து மழை இனியதாகப் பெய்தது; அங்ஙனம் பெய்த பெரியமழையைப் பொருந்தி தலைவரைப்பிரிந்த மகளிர் செயலறும்படி வந்த துன்பத்தைத் தரும் மாலைக் காலத்தில் மலரையுடைய கொம்பிலிருந்தபோழ்ந்தாற் போன்ற கண்களையுடைய மயில்கள் பாய்கின்ற நீரையுடைய அகன்ற இடம்தனித்து வருந்த கூவாநின்றன; அவை மிக்க பேதைமையையுடையன.
முடிபு: தோழி, மழை ஒருத்தல் மடியப் பாம்பு பை அவிய மயங்கி வீழ்ந்தன்று; மழை தழீஇ வந்த மாலை கூஉம்; பெரும் பேதைய.
கருத்து: கார்காலம் வந்தமையின் யான் வருந்துவேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 391. முல்லை - தலைவி கூற்று, தலைவி, இலக்கியங்கள், கூற்று, முல்லை, வந்த, குறுந்தொகை, தோழி, மயங்கி, அவிய, மயில்கள், எட்டுத்தொகை, சங்க, மடியப்