குறுந்தொகை - 369. பாலை - தோழி கூற்று
(தலைவியை நோக்கி, “தலைவனுடன் செல்வாயாக” என்று தோழிகூறியது.)
அத்த வாகை அமலை வானெற் றரியார் சிலம்பி னரிசி யார்ப்பக் கோடை தூக்குங் கானம் செல்வாந் தோழி நல்கினர் நமரே. |
|
- குடவாயிற் கீரத்தனார். |
தோழி! நம் தலைவர் தண்ணளி செய்தனர; ஆதலின் அருவழியி லேயுள்ள வாகைமரத்தின் ஒலியை யுடைய வெள்ளிய நெற்றுக்களை அவற்றின் விதை உள்ளிடு பரலையுடைய சிலம்பைப் போல ஆரவாரிக்க மேல்காற்றுஅலைக்கின்ற பாலை நிலத்திற் செல் வோமாக.
முடிபு: தோழி, நமர் நல்கினர்; கானம் செல்வாம்.
கருத்து: தலைவனுடன் போவேமாக.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 369. பாலை - தோழி கூற்று, தோழி, இலக்கியங்கள், பாலை, குறுந்தொகை, கூற்று, நல்கினர், கானம், எட்டுத்தொகை, சங்க