குறுந்தொகை - 368. மருதம் - தலைவி கூற்று
(வரைவுக்குரிய முயற்சிகள் மிகுதியாக நிகழ்தலைத் தோழியால் உணர்ந்த தலைவி, “இதுகாறும் மாமையை இழந்து துன்புற்றேன்; இனிஇடையீடின்றித் தலைவனோடு இன்புறுவேன்” என்று கூறியது.)
மெல்லிய லோயே மெல்லிய லோயே நன்னாண் நீத்த பழிதீர் மாமை வன்பின் ஆற்றுதல் அல்லது செப்பிற் சொல்ல கிற்றா மெல்லிய லோயே சிறியரும் பெரியரும் வாழும் ஊர்க்கே |
5 |
நாளிடைப் படாஅ நளிநீர் நீத்தத் திண்கரைப் பெருமரம் போலத் தீதில் நிலைமை முயங்குகம் பலவே. |
|
- நக்கீரனார். |
மெல்லிய இயல்பை யுடையாய் மெல் இயலோயே! நல்ல நாளிலே நம்மை நீங்கிய குற்றமற்ற மாமையின் இயல்பை நம் வலிய இயல்பினாற் பொறுத்திருத்தலையன்றி அங்ஙனம் நீங்குதற்கு ஏதுவாகிய துன்பத்தைச் சொற்களால் சொல்லுதற்கு ஆற்றல் இல்லேம் சிறியோரும் பெரியோரும் வாழ்கின்ற ஊரில் ஒரு நாளேனும் இடையீடு படாத செறிந்த நீரையுடைய வெள்ளத்தினது திண்ணிய கரையிலேயுள்ள பெரிய மரத்தைப் போல தீங்கில்லாத நிலையிலிருந்து பலமுறை தலைவரைத் தழுவுவேமாக.
முடிபு: மெல்லியலோயே, மாமை சொல்லகிற்றாம்; ஊர்க்கு முயங்குகம்.
கருத்து: இனி யாதொரு தீங்குமின்றித் தலைவரோடு கூடி யிருப்பேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 368. மருதம் - தலைவி கூற்று, மெல்லிய, இலக்கியங்கள், தலைவி, மருதம், குறுந்தொகை, கூற்று, லோயே, இயல்பை, முயங்குகம், சங்க, எட்டுத்தொகை, மாமை