குறுந்தொகை - 365. குறிஞ்சி - தோழி கூற்று
("யான் வரையுமவ்வளவும் தலைவி ஆற்றுவளோ?” என்று கேட்டதலைவனை நோக்கித் தோழி, “இவள் ஆற்றாள்” என்பது படச்சொல்லியது.)
கோடீர் இலங்குவளை நெகிழ நாளும் பாடில கலிழ்ந்து பனியா னாவே துன்னரும் நெடுவரைத் ததும்பிய அருவி தன்ணென் முரசின் இமிழிசை காட்டும் மருங்கிற் கொண்ட பலவிற் |
5 |
பெருங்கல் நாடநீ நயந்தோள் கண்ணே. |
|
- மதுரை நல்வெள்ளியார். |
அணுகுதற்கரிய நெடிய மலைப்பக்கத்திலே ஒலித்தஅருவியானது தண்ணென்ற ஒலியையுடைய முரசைப்போல ஒலிக்கின்ற ஆரவாரத்தை வெளிப்படுத்தும் பக்கத்திற்கொண்ட பலாமரங்களையுடைய பெரிய மலையையுடைய நாடனே நின்னால் விரும்பப்பட்ட தலைவியின் கண்கள் சங்குகளை அறுத்துச் செய்த விளங்கு கின்ற வளைகள் நெகிழாநிற்ப நாள்தோறும் துயிலுதல் இல்லாதனவாகி கலங்கி நீர்த்துளியை நீங்கா.
முடிபு: நாட, நீ நயந்தோள் கண் பாடில; கலிழ்ந்து பனி ஆனா.
கருத்து: இவள் நின்னைப் பிரிந்து ஆற்றியிராள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 365. குறிஞ்சி - தோழி கூற்று, இலக்கியங்கள், தோழி, குறிஞ்சி, குறுந்தொகை, கூற்று, நயந்தோள், கலிழ்ந்து, எட்டுத்தொகை, சங்க, பாடில