குறுந்தொகை - 361. குறிஞ்சி - தலைவி கூற்று
(வரைவுக்குரிய முயற்சிகள் நிகழாநிற்ப, “இதுகாறும் நீ தலைவன் பிரிவை நன்கு ஆற்றினை” என்று கூறிப் பாராட்டிய தோழியை நோக்கி,“அவர் மலையிலிருந்து வந்த காந்தளை வளர்த்து ஆற்றினேன்” என்று தலைவி கூறியது.)
அம்ம வாழி தோழி அன்னைக் குயர்நிலை உலகமுஞ் சிறிதால் அவர்மலை மாலைப் பெய்த மணங்கமழ் உந்தியொடு காலை வந்த காந்தள் முழுமுதல் மெல்லிலை குழைய முயங்கலும் |
5 |
இல்லுய்த்து நடுதலுங் கடியா தோளே. | |
- கபிலர். |
தோழி! ஒன்று கூறுவன் கேட்பா யாக; தலைவருடைய மலையிலே மாலைக் காலத்திலே பெய்த மழையினால் உண் டாகிய நறுமணம் கமழும் ஆற்றோடு காலையிலே இங்கே வந்த காந்தளினது மெல்லிய இலையானது குழையும்படி தழுவுதலையும் வீட்டிற் கொணர்ந்து அதன் கிழங்கை நான் நடுதலையும் விலக்காதவளாகிய தாய்க்கு உயர்ந்த நிலையாகிய தேவருலகும் கைம்மாறாகக் கருது மிடத்துச் சிறிதாகும்.
முடிபு: தோழி, உந்தியொடு வந்த காந்தண் முழுமுதலை முயங்கலும் நடுதலும் கடியாதோளாகிய அன்னைக்கு உயர்நிலை யுலகமும் சிறிது.
கருத்து: தலைவன் மலையிலிருந்து வந்த காந்தளைக் கொண்டு ஆற்றியிருந்தேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 361. குறிஞ்சி - தலைவி கூற்று, வந்த, இலக்கியங்கள், தலைவி, கூற்று, குறிஞ்சி, தோழி, குறுந்தொகை, பெய்த, உந்தியொடு, முயங்கலும், தலைவன், எட்டுத்தொகை, சங்க, மலையிலிருந்து