குறுந்தொகை - 360. குறிஞ்சி - தலைவி கூற்று
(தாய் வெறியெடுக்கவெண்ணியதைக் கூறி அஞ்சிய தோழிக்கு, “தலைவன் இங்கே வாராதொழியின் நன்றாம்; அதனால் துன்பம் உண்டாயினும் பின் இனிதாக முடியும்” என்று தலைவி கூறியது.)
வெறியென உணர்ந்த வேல னோய்மருந் தறியா னாகுதல் அன்னை காணிய அரும்படர் எவ்வம் இன்றுநாம் உழப்பினும் வாரற்க தில்ல தோழி சாரற் பிடிக்கை அன்ன பெருங்குரல் ஏனல் |
5 |
உண்கிளி கடியும் கொடிச்சிகைக் குளிரே சிலம்பிற் சிலம்புஞ் சோலை இலங்குமலை நாடன் இரவி னானே. |
|
- மதுரை ஈழத்துப் பூதன்றேவனார். |
தோழி! பொறுத்தற்கரியநினைவாலுண்டாகும் துன்பத்தை இன்று நாம் அடைந்தாலும் எனது நோயைத் தீர்க்கும் வழி வெறியாடுதலென்று தெளிந்த வேலன் அந்நோயைத் தீர்ப்பதற்கு உரிய பரிகாரத்தை அறியாதவன் ஆதலை நம் தாய் காணும்பொருட்டு மலைச்சாரலின் கண் பெண்யானையின்கையையொத்த பெரிய கதிர்க் கொத்தி லுள்ள தினையை உண்ணுகின்ற கிளி களை ஓட்டும் குறமகளின் கையிலுள்ளகுளிரென்னும் கருவி சிலம்பைப் போல ஒலிக்கின்ற சோலை கள் விளங்கும் மலைநாடனாகிய தலைவன் இராக்காலத்தே இங்கே வாராதொழிக; இஃது எனது விருப்பம்.
முடிபு: தோழி, நாடன் இரவினான் வாரற்க.
கருத்து: தலைவன் ஈண்டு வாராதொழிக.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 360. குறிஞ்சி - தலைவி கூற்று, இலக்கியங்கள், தலைவி, தோழி, குறிஞ்சி, குறுந்தொகை, கூற்று, எனது, நாடன், தலைவன், வாராதொழிக, சோலை, தாய், எட்டுத்தொகை, சங்க, இங்கே, வாரற்க