குறுந்தொகை - 362. குறிஞ்சி - தோழி கூற்று
(தலைவியின் நோய் முருகனால் வந்ததெனக் கருதித் தாய் வெறியாட்டெடுத்தவிடத்துத் தோழி வெறியாடும் வேலனை நோக்கி, “தலைவி யின் நோயைப் பரிகரிக்க எண்ணி இடும் இப்பலியை அந்நோய்க்குக்காரணமாகிய தலைவனது மார்பும் உண்ணுமோ?” என்று கூறும் வாயிலாகஅறத்தொடு நின்றது.)
முருகயர்ந் துவந்த முதுவாய் வேல சினவ லோம்புமதி வினவுவ துடையேன் பல்வே றுருவிற் சில்லவிழ் மடையொடு சிறுமறி கொன்றிவள் நறுநுதல் நீவி வணங்கினை கொடுத்தி யாயின் அணங்கிய |
5 |
விண்தோய் மாமலைச் சிலம்பன் ஒண்தார் அகலமும் உண்ணுமோ பலியே. |
|
- வேம்பற்றூர்க் கண்ணன் கூத்தனார். |
முருகனை வழிபட்டு வந்த அறிவு வாய்த்த வேலனே கோபித்தலைப் பாதுகாப்பாயாக; நின்னைக் கேட்பது ஒன்று உடையேன்; பலவாகிய வேறுபட்ட நிறத்தையுடைய சில சோற்றையுடைய பலியோடு சிறிய ஆட்டுக்குட்டியைக் கொன்று இத்தலைவியினது நறிய நெற்றியைத் தடவி முருகக் கடவுளை வணங்கிப் பலியாகக் கொடுப்பாயாயின் இவளைத் துன்புறுத்திய வானத்தை அளாவிய பெரிய மலைப்பக்கத்தையுடைய தலைவனது ஒள்ளிய மாலையை யணிந்த மார்பும் நீ கொடுக்கும் பலியைஉண்ணுமோ?
முடிபு: வேல, சினவல் ஓம்புமதி; வினவுவது உடையேன்:மறிகொன்று, நுதல் நீவிக் கொடுத்தியாயின் சிலம்பன் அகலமும் பலிஉண்ணுமோ?
கருத்து: இவளுக்குற்ற நோய் ஒரு தலைவனால் வந்தது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 362. குறிஞ்சி - தோழி கூற்று, தோழி, இலக்கியங்கள், கூற்று, குறுந்தொகை, குறிஞ்சி, சிலம்பன், அகலமும், உடையேன், உண்ணுமோ, நோய், எட்டுத்தொகை, சங்க, தலைவனது, மார்பும்