குறுந்தொகை - 359. மருதம் - தோழி கூற்று
(வாயில் பெறாத தலைமகன் மைந்தனும் ஆற்றாமையும் வாயிலாகத்தானே புக்குப் பாயலிற் புதல்வனைத் தழுவிக் கொண்ட காலத்தில் தலைவி ஊடல்தணிந்ததைத் தோழி பாணனுக்குக் கூறியது.)
கண்டிசிற் பாண பண்புடைத் தம்ம மாலை விரிந்த பசுவெண் ணிலவிற் குறுங்கால் கட்டில் நறும்பூஞ் சேக்கைப் பள்ளி யானையின் உயிர்த்தனன் நசையிற் புதல்வற் றழீஇயினன் விறலவன் |
5 |
புதல்வன் தாயவன் புறங்கவைஇ யினளே. | |
- பேயனார். |
பாண! வெற்றியையுடையதலைவன் மாலைக்காலத்திலே விரிந்த இளைய வெள்ளிய நிலாவொளியில் குறிய கால்களையுடையகட்டிலினிடத்தேயுள்ள நறிய மலர் பரப்பிய படுக்கையில் படுத்தலையுடையயானையைப்போலப் பெருமூச்சு விட்டானாகி விருப்பதினால் தன் பிள்ளையைத் தழுவினான் அப்பிள்ளையின் தாயாகிய தலைவி அத்தலைவனது புறத்தைத் தழுவினாள் இதனைப் பார்ப்பாயாக; இச்செயல் அழகையுடையது!
முடிபு: பாண, விறலவன் புதல்வற்றழீஇயினன்; தாய் அவன்புறங்கவைஇயினள்; கண்டிசின்; பண்புடைத்து!
கருத்து: தலைவி புலவி தணிந்தாள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 359. மருதம் - தோழி கூற்று, இலக்கியங்கள், தோழி, மருதம், தலைவி, குறுந்தொகை, கூற்று, விரிந்த, விறலவன், எட்டுத்தொகை, சங்க