குறுந்தொகை - 357. குறிஞ்சி - தோழி கூற்று
(வரையாது வந்தொழுகும் தலைமகன் சிறைப்புறத்தே நிற்ப, தலைவியை நோக்கி, “நின் தோள்கள் தலைவனோடு நீ நட்புச் செய்யாததன்முன் நல்லனவாக இருந்தன” என்று தோழி கூறியது.)
முனிபடர் உழந்த பாடில் உண்கண் பனிகால் போழ்ந்து பணியெழில் ஞெகிழ்தோள் மெல்லிய ஆகலின் மேவரத் திரண்டு நல்ல என்னுஞ் சொல்லை மன்னிய ஏனலஞ் சிறுதினை காக்குஞ் சேணோன் |
5 |
ஞெகிழியிற் பெயர்ந்த நெடுநல் யானை மின்படு சுடரொளி வெரூஉம் வான்தோய் வெற்பன் மணவா ஊங்கே. |
|
- கபிலர். |
மூங்கிலினதுஅழகு நெகிழ்ந்த நின் தோள்கள் வெறுக்கத்தக்க துன்பத்தால் வருந்திய துயிலுதலில்லாத மையுண்ட கண்களில் உண்டாகும் துளி குறுக்கே சென்று இப்பொழுது மெலிவையுடையவாதலினால் தினைச் சாதியுள் அழகிய சிறிய தினையைக் காக்கின்ற பரணின் மேலுள்ள குறவனது கொள்ளிக் கட்டையினால் அஞ்சிப்போன உயர்ந்த நல்ல யானை யானது விண்மீன் வீழ்வதனால் உண் டாகிய மிக்க ஒளியை அஞ்சுகின்ற வானத்தை அளாவிய மலையையுடைய தலைவன் பொருந்துதற்கு முன்பு விரும்பும்படி பருத்து இவை நல்லன என்று கூறப்படும் சொற்களை அடைந்தன.
முடிபு: தோள், வெற்பன் மணவாவூங்கு நல்லவென்னும் சொல்லைமன்னிய.
கருத்து: தலைவன் வரையாது வந்தொழுகுதலின் நினக்குத் துன்புஉண்டாகின்றது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 357. குறிஞ்சி - தோழி கூற்று, தோழி, இலக்கியங்கள், கூற்று, குறுந்தொகை, குறிஞ்சி, யானை, வெற்பன், தலைவன், நல்ல, வரையாது, எட்டுத்தொகை, சங்க, தோள்கள்