குறுந்தொகை - 355. குறிஞ்சி - தோழி கூற்று
(மழை பெய்யும் நடுயாமத்தில் தலைவன் வந்தானாக, “இந்த இருளில் நீ எங்ஙனம் வழி தெரிந்து எம் ஊரைத்தேடி வந்தனை?” என்று அவனுக்குத் தோழி கூறியது.)
பெயல்கண் மறைத்தலின் விசும்புகா ணலையே நீர்பரந் தொழுகலின் நிலங்கா ணலையே எல்லை சேறலின் இருள்பெரிது பட்டன்று பல்லோர் துஞ்சும் பானாட் கங்குல் யாங்குவந் தனையோ ஓங்கல் வெற்ப |
5 |
வேங்கை கமழுமெஞ் சிறுகுடி யாங்கறிந் தனையோ நோகோ யானே. |
|
- கபிலர். |
உயர்ச்சியையுடைய மலை யையுடைய தலைவனே மழை இடத்தை மறைப்பதனால் வானத்தைக்காண்பாயல்லை; அம்மழையின் நீர் எங்கும் பரந்து ஓடுதலினால் நிலத்தைக்காண்பாயல்லை சூரியன் போனமையால் இருள் மிக உண்டாயிற்று; இந்நிலையில் பலரும் துயில்கின்ற நள்ளிரவில் எங்ஙனம் வந்தாய்? வேங்கைமரத்தின் மலர் மணம் வீசுகின்ற எமது சிற்றூரை எங்ஙனம் அறிந்தாய்? யான் வருந்துவேன்.
முடிபு: வெற்ப, விசும்பு காணலை; நிலங்காணலை; இருள் பட்டன்று; யாமத்து யாங்கு வந்தனை? எம் சிறு குடி யாங்கு அறிந்தனை? யான் நோகு.
கருத்து: நீ இவ்விரவில் வருதல் குறித்து அஞ்சுகின்றேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 355. குறிஞ்சி - தோழி கூற்று, இலக்கியங்கள், தோழி, குறிஞ்சி, எங்ஙனம், குறுந்தொகை, கூற்று, வெற்ப, இருள், யான், தனையோ, யாங்கு, ணலையே, சங்க, வந்தனை, எட்டுத்தொகை, பட்டன்று