குறுந்தொகை - 353. குறிஞ்சி - தோழி கூற்று
(பகற்குறி வந்தொழுகும் தலைவன், தலைவி இல்லினின்றும் வெளிப்போதலால் ஊரினர் அறிவரோவென அஞ்சி இரவுக்குறி விரும்பிச்சிறைப்புறத்தே நிற்பத் தலைவியை நோக்கிக் கூறுவாளாய், “நம் அன்னையின் காவல் இரவில் மிக்கது” என்று தோழி இரவுக்குறி மறுக்கும் வாயிலாக வரைவு கடாயது).
ஆர்கலி வெற்பன் மார்புபுணை யாகக் கோடுயர் நெடுவரைக் கவாஅற் பகலே பாடின் அருவி ஆடுதல் இனிதே நிரையிதழ் பொருந்தாக் கண்ணோ டிரவிற் பஞ்சி வெண்திரிச் செஞ்சுடர் நல்லிற் |
5 |
பின்னுவீழ் சிறுபுறந் தழீஇ அன்னை முயங்கத் துயிலின் னாதே. |
|
- உறையூர் முதுகூற்றனார். |
பகற் காலத்தில் கொடுமுடிகள் உயர்ந்த நீண்ட மலையினதுதாழ்வரையினிடத்தே ஓசை இனிதாகியஅருவியில் நிறைந்தமுழக்கத்தையுடைய மலையையுடைய தலைவனது மார்புதெப்பமாக நீர்விளையாடல் இனிய இராக்காலத்தில் பஞ்சாலாகிய வெள்ளிய திரியையுடைய செவ்வியவிளக்கையுடைய நல்ல வீட்டின் கண்ணே நம் தாய் பின்னல் தாழ்கின்ற பிடரியைத் தழுவி அணைப்ப வரிசையாகிய இமைகள் ஒன்றோடு ஒன்று பொருந்தாத விழிகளோடு நாம் துயிலுதல் இன்னாமையையுடையது.
முடிபு: பகலில் அருவியாடுதல் இனிது; இரவில் அன்னை முயங்கத்துயில் இன்னாது.
கருத்து: காப்பு மிகுதியால் இரவுக்குறி பெறற்கு அரிது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 353. குறிஞ்சி - தோழி கூற்று, இலக்கியங்கள், தோழி, குறிஞ்சி, இரவுக்குறி, குறுந்தொகை, கூற்று, இரவில், அன்னை, எட்டுத்தொகை, சங்க