குறுந்தொகை - 35. மருதம் - தலைவி கூற்று
(தலைவன் பிரிந்தமையால் மெலிவுற்ற தலைவி அழுதாளாக, “நீ அழுதது ஏன்?” என்று வினாவிய தோழிக்கு, “தலைவர் பிரிந்த காலத்தில் அழாமல் உடம்பட்ட என் கண்கள் இப்பொழுது நாணமின்றி அழுதன” என்று தன் வருத்தத்தைக் கண்ணின்மேலேற்றித் தலைவி உரைத்தது.)
நாணில மன்றவெங் கண்ணே நாணேர்பு சினைப்பசும் பாம்பின் சூன்முதிர்ப் பன்ன கனைத்த கரும்பின் கூம்புபொதி யவிழ நுண்ணுறை யழிதுளி தலைஇய தண்வரல் வாடையும் பிரிந்திசினோர்க் கழலே. |
5 |
- கழார்க்கீரனெயிற்றி. |
தோழி! தலைவர் பிரிந்த நாளில் உடம்பட்டு கருப்பத்தை உடைய பச்சைப் பாம்பினது கருவின் முதிர்ச்சியைப் போன்ற திரண்ட கரும்பினது குவிந்த அரும்பு மலரும்படி நுண்ணிய மழை பொழிந்து அழிந்த துளி பொருந்திய தண்ணிய வருதலை உடைய வாடைக் காற்றை உடைய கூதிர்க் காலத்தும் பிரிந்துறையும் தலைவர் பொருட்டு அழுதலால் எம்முடைய கண்கள் நிச்சயமாக நாணம் இல்லாதன.
முடிபு: நாள் நேர்பு, பிரிந்திசினோர்க்கு அழுதலால் எம் கண்கள் நாணில.
கருத்து: அவர் பிரியும் பொழுது கண்கள் அழுது தடை செய்யாதது தவறு.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 35. மருதம் - தலைவி கூற்று, தலைவி, கண்கள், இலக்கியங்கள், குறுந்தொகை, கூற்று, மருதம், உடைய, அழுதலால், தலைவர், பிரிந்த, எட்டுத்தொகை, சங்க, நாணில