குறுந்தொகை - 347. பாலை - தலைவன் கூற்று
(பொருள்வயிற் பிரிய எண்ணிய தன் நெஞ்சத்தை நோக்கி,"தலைவியும் உடன் வருவாளாயின் நாம் பிரிதல் கூடும்" என்று கூறித்தலைவன் செலவு தவிர்ந்தது.)
மல்குசுனை புலர்ந்த நல்கூர் சுரமுதற் குமரி வாகைக் கோலுடை நறுவீ மடமாத் தோகைக் குடுமியிற் றோன்றும் கான நீளிடைத் தானு நம்மொடு ஒன்றுமணஞ் செய்தனள் இவளெனின் |
5 |
நன்றே நெஞ்சம் நயந்தநின் துணிவே. | |
- காவிரிப்பூம்பட்டினத்துச் சேந்தங் கண்ணனார். |
நெஞ்சே முன்பு நீர் மல்கிய சுனை பின்பு வற்றுதலினால் வறுமையுற்ற பாலைநிலத்தில் வளர்ந்த இளமையையுடையவாகைமரத்தின் கொம்பின் கண் உள்ள நறிய மலர் மடப்பத்தையுடையகரிய மயிலினது உச்சிக் கொண்டையைப் போலத் தோன்றுகின்ற நீண்ட காட்டு வழியில் இத்தலைவி தானும் நம்மொடு வந்து பொருந்தும் முயக்கத்தைச் செய்வாளெனின் பொருள் செய்தற்குவிரும்பிய நினது துணிவு நன்மையுடைய தேயாகும்.
முடிபு: நெஞ்சம், நீளிடையில் இவள்தானும் மணஞ் செய்தனளெனின் நின்துணிவு நன்றே.
கருத்து: தலைவியைப் பிரிந்து செல்லுதல் தக்கதன்று.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 347. பாலை - தலைவன் கூற்று, இலக்கியங்கள், பாலை, குறுந்தொகை, தலைவன், கூற்று, நன்றே, நெஞ்சம், எட்டுத்தொகை, சங்க, நம்மொடு