குறுந்தொகை - 345. நெய்தல் - தோழி கூற்று
(பகலில் வந்து தலைவியைக் கண்டு அளவளாவிச் செல்லும்வழக்கத்தையுடைய தலைவனை நோக்கி, "நீ இனி இரவில் வந்து இங்கேதங்கிச் செல்க" என்று தோழி கூறியது.)
இழையணிந் தியல்வருங் கொடுஞ்சி நெடுந்தேர் வரைமருள் நெடுமணல் தவிர்த்துநின் றசைஇத் தங்கினி ராயின் தவறோ தெய்ய தழைதாழ் அல்குல் இவள்புலம் பகலத் தாழை தைஇய தயங்குதிரைக் கொடுங்கழி |
5 |
இழுமென ஒலிக்கும் ஆங்கண் பெருநீர் வேலியெம் சிறுநல் லூரே. |
|
- அண்டர்மகன் குறுவழுதியார். |
தாழை பொருந்திய விளங்கிய அலைகளையுடைய வளைந்தகழியானது இழுமென்று ஆரவாரம்செய்யும் அவ்விடத்துள்ள பெரிய கடலை வேலியாகவுடையஎமது சிறிய நல்லூரின்கண் பொற்படைகளால் அணியப்பட்டுஓடுகின்ற கொடுஞ்சியையுடைய நுமது உயர்ந்த தேரை மலையையொத்தஉயர்ந்த மணல்மேட்டிலே நிறுத்திவிட்டு இங்கு இருந்து இளைப்பாறி தழையுடை தாழ்ந்த அல்குலையுடையஇத்தலைவியினது தனிமை வருத்தம் நீங்கும்படி தங்குவீரானால் அது பிழையாகுமோ?
முடிபு: தவிர்த்து நின்று அசைஇ, புலம்பு அகல நல்லூரில் தங்கினிராயின் தவறோ!
கருத்து: இனி நீர் இரவில் வந்து தலைவியோடு அளவளாவுவீராக.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 345. நெய்தல் - தோழி கூற்று, இலக்கியங்கள், தோழி, நெய்தல், வந்து, குறுந்தொகை, கூற்று, தவறோ, தாழை, சங்க, எட்டுத்தொகை, இரவில்