குறுந்தொகை - 335. குறிஞ்சி - தோழி கூற்று
(தலைவி இற்செறிக்கப்படுதலை உணர்த்திய தோழி, “அவள் ஊர்வெற்பிடை நண்ணியது” என்றும், “அவள் வல்விற் கானவர் தங்கை”என்றும் கூறி இரவுக்குறி பெறுதற் கரிது என்பதைத் தலைவனுக்குப் புலப்பட வைத்தது.)
நிரைவளை முன்கை நேரிழை மகளிர் இருங்கல் வியலறைச் செந்தினை பரப்பிச் சுனைபாய் சோர்விடை நோக்கிச் சினையிழிந்து பைங்கண் மந்தி பார்ப்போடு கவரும் வெற்பிடை நண்ணி யதுவே வார்கோல் |
5 |
வல்விற் கானவர் தங்கைப் பெருந்தோட் கொடிச்சி யிருந்த வூரே. |
|
- இருந்தையூர்க் கொற்றன் புலவனார். |
நீண்ட அம்பையும் பல இலக்குக்களை ஒரு தொடையில் துளைக்கவிடும் வலியவில்லையும் உடைய வேட்டுவருடையதங்கையாகிய பெரிய தோளையுடைய குறிஞ்சிநில மகளாகிய தலைவி வாழும் ஊர் வரிசையாகிய வளையையுடைய முன்கையையும் நேர்ந்தஅணிகலன்களையுமுடைய மகளிர் கரிய மலையிலுள்ள அகன்ற பாறையினிடத்து சிவந்த தினையைப் பரப்பி சுனையின்கண் பாய்கின்ற சோர்தலையுடைய சமயத்தைப் பார்த்து மரக்கிளையினின்றும் இறங்கி பசிய கண்ணையுடையபெண் குரங்குகள் குட்டிகளோடுஅத்தினையைக் கைக்கொள்ளும் மலையினிடத்தே பொருந்தியது.
முடிபு: கொடிச்சி இருந்த ஊர் வெற்பிடை நண்ணியது.
கருத்து: தலைவியை இரவுக்குறியிற்கண்டு அளவளாவுதல் அரிது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 335. குறிஞ்சி - தோழி கூற்று, தோழி, இலக்கியங்கள், கூற்று, குறுந்தொகை, குறிஞ்சி, மகளிர், வெற்பிடை, கொடிச்சி, கானவர், தலைவி, எட்டுத்தொகை, சங்க, “அவள், வல்விற்