குறுந்தொகை - 321. குறிஞ்சி - தோழி கூற்று
(நொதுமலர் வரையப் புக்க காலத்தில், "நான் அறத்தொடு நிற்பேன்"என்று தலைவிக்குத் தோழி கூறியது.)
மலைச்செஞ் சாந்தின் ஆர மார்பினன் சுனைப்பூங் குவளைச் சுரும்பார் கண்ணியன் நடுநாள் வந்து நம்மனைப் பெயரும் மடவர லரிவைநின் மார்பமர் இன்றுணை மன்ற மரையா இரிய ஏறட்டுச் |
5 |
செங்கண் இரும்புலி குழுமும் அதனால் மறைத்தற் காலையோ அன்றே திறப்பல் வாழிவேண் டன்னைநம் கதவே. |
|
- ...... |
அன்னை! மடப்பம்வருதலையுடைய அரிவையே நினது மார்பைப் பொருந்தும் இனிய தலைவன் மலையில் உண்டாகியசெஞ்சந்தனத்தையும் முத்து மாலையையும் அணிந்த மார்பினனாகியும் சுனையில் மலர்ந்த குவளையினது வண்டுகள் நிறைந்த கண்ணியை உடையவனாகியும் நம்முடைய வீட்டிற்கு நள்ளிரவில் வந்து மீண்டு செல்வான்; அக்காலத்தில் மன்றத்தின்கண் உள்ள மரையாவானது நீங்க அதன் ஆணைக்கொன்று செவ்விய கண்களையுடைய கரிய புலி முழங்கும்; அதனால்! நம் ஒழுக்கத்தைமறைக்கும் காலம் இஃது அன்று; நமதுமந்தணத்தை வெளியிடுவேன்; இதனை நீ விரும்புவாயாக.
முடிபு: அன்னை, அரிவை, நின் துணை, மார்பினன், கண்ணியன்,வந்து பெயரும்; புலி ஏறு அட்டுக் குழுமும்; அதனால் மறைத்தற்காலைஅன்று; நம் கதவு திறப்பல், நீ வேண்டு.
கருத்து: நான் அறத்தொடு நிற்பேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 321. குறிஞ்சி - தோழி கூற்று, இலக்கியங்கள், தோழி, வந்து, குறிஞ்சி, குறுந்தொகை, கூற்று, அதனால், பெயரும், குழுமும், அன்னை, புலி, திறப்பல், நிற்பேன், சங்க, எட்டுத்தொகை, நான், அறத்தொடு, மார்பினன், கண்ணியன்