குறுந்தொகை - 320. நெய்தல் - தலைவி கூற்று
(தலைவன் சிறைப்புறத்தானாக, "ஊரினர் கூறும் அலர் பெரிதாயிற்று" என்று தோழிக்குக் கூறுவாளாய், விரைவில் வரைந்து கொள்ள வேண்டு மென்பதை அவனுக்குத் தலைவி புலப்படுத்தியது.)
பெருங்கடற் பரதவர் கொண்மீன் உணங்கல் அருங்கழிக் கொண்ட இறவின் வாடலொடு நிலவுநிற வெண்மணல் புலவப் பலவுடன் எக்கர்தொறும் பரக்குந் துறைவனொ டொருநாள் நக்கதோர் பழியு மிலமே போதவிழ் |
5 |
பொன்னிணர் மரீஇய புள்ளிமிழ் பொங்கர்ப் புன்னையஞ் சேரி யிவ்வூர் கொன்னலர் தூற்றந்தன் கொடுமை யானே. |
|
- தும்பிசேர் கீரனார். |
தோழி! பெரிய கடலினிடத்தே பரதவர் கொண்டமீனினது உலர்ந்த வற்றல் நீந்துதற்குஅரிய கழியினிடத்தே அவர் கைக்கொண்ட இறாமீனின் வாடிய வற்றலொடு நிலவினது நிறத்தைக் கொண்டவெள்ளிய மணல் புலால் நாறும்படி பலஒருங்கே மணல்மேடு தோறும் பரவுகின்ற துறையையுடைய தலைவனோடு ஒரு நாளேனும்மகிழ்ந்து விளையாடிய பழி இல்லேம்; அங்ஙனம் இலமாகவும் செவ்விஅரும்பு மலர்ந்த பொன் போன்ற பூங்கொத்துக்கள்பொருந்திய வண்டுகள் ஒலிக்கின்ற கிளைகளை யுடைய புன்னைமரங்களையுடைய சேரிகள் உள்ள இவ்வூரார் தம்பாலுள்ள கொடிய தன்மையினால் வீணே பழிமொழிகளைக் கூறுவர்.
முடிபு: துறைவனொடு ஒரு நாள் நக்கதோர் பழியுமிலம்; இவ்வூர்அலர் தூற்றும்.
கருத்து: ஊரினர் கூறும் அலர் பெரிதாயிற்று.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 320. நெய்தல் - தலைவி கூற்று, தலைவி, இலக்கியங்கள், கூற்று, குறுந்தொகை, நெய்தல், பெரிதாயிற்று, பரதவர், நக்கதோர், அலர், ஊரினர், எட்டுத்தொகை, சங்க, கூறும்