குறுந்தொகை - 306. நெய்தல் - தலைவி கூற்று
(காப்பு மிகுதியால் வருந்திய தலைவி, வரையாது வந்தொழுகும்தலைவனிடத்துச் சிறிது வேறுபாடுடையளாகியும் அவ்வேறுபாடுஅவனைக் கண்டக்கால் மறைவதைத் தன் நெஞ்சை நோக்கிக் கூறுவாளாய்க் கூறியது.)
மெல்லிய இனிய மேவரு தகுந இவைமொழி யாமெனச் சொல்லினு மவைநீ மறத்தியோ வாழியென் னெஞ்சே பலவுடன் காமர் மாஅத்துத் தாதமர் பூவின் வண்டுவீழ் பயருங் கானல் |
5 |
தண்கடற் சேர்ப்பனைக் கண்ட பின்னே. | |
- அம்மூவனார். |
என் நெஞ்சே! ஓசையால்மெல்லியனவும் பொருளால் இனியனவும் விரும்பத்தக்கனவுமாகிய இச்சொற்களை மொழியேம் என்று நினக்குநான் சொன்னாலும் அழகிய மாமரத்தினது தாதுகள் பொருந்திய மலரினிடத்து வண்டுகள் பல ஒருங்கே வீழ்தலைச் செய்யும் சோலையையுடைய தண்ணிய கடற்கரையையுடைய தலைவனை கண்டபின்! நீ நான் கூறிய அவற்றை மறந்து விடுகின்றாயோ?
முடிபு: நெஞ்சே, மொழியாமெனச் சொல்லினும் சேர்ப்பனைக்கண்டபின், நீ அவை மறத்தியோ?
கருத்து: தலைவனைக் காணின் எல்லாத் துன்பங்களையும் மறந்துவிடுகின்றேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 306. நெய்தல் - தலைவி கூற்று, இலக்கியங்கள், தலைவி, நெய்தல், குறுந்தொகை, கூற்று, நெஞ்சே, மறத்தியோ, எட்டுத்தொகை, சங்க