குறுந்தொகை - 302. குறிஞ்சி - தலைவி கூற்று
(தலைவன் வரைவிடை வைத்துப் பிரிந்த காலத்தில் ஆற்றாளெனக்கவன்ற தோழிக்குத் தலைவி ஆற்றாமையின் காரணத்தைக் கூறியது.)
உரைத்திசின் தோழியது புரைத்தோ அன்றே அருந்துயர் உழத்தலும் ஆற்றாம் இதன்றலைப் பெரும்பிறி தாகல் அதனினும் அஞ்சுதும் அன்னோ இன்னும் நன்மலை நாடன் பிரியா நண்பினர் இருவரும் என்னும் |
5 |
அலரதற் கஞ்சினன் கொல்லோ பலருடன் துஞ்சூர் யாமத் தானுமென் நெஞ்சத் தல்லது வரவறி யானே. |
|
- மாங்குடிகிழார். |
தோழி! தலைவனுடைய பிரிவால் உண்டாகிய பொறுத்தற்கரியதுயரால் வருந்துதற்கும் ஆற்றலில்லேம்; அதற்கு மேல் இறந்துபடுதலை அதைக் காட்டிலும் அஞ்சுகின்றோம்; அந்தோ! இன்னும்! நல்ல மலைநாட்டை யுடைய தலைவன் இருவரும் என்றும் பிரியாத நட்பையுடையார் என்று பிறர் கூறும் பழிமொழிக்கு அஞ்சினனோ? ஊரிலுள்ளோர் பலர் ஒருங்கே துயிலுகின்றஇரவிலும் யான் தன்னையேநினைப்பதனால் என் நெஞ்சின் கண் வருதலை யன்றி நேரிலே வருதலை அறியான்; அங்ஙனம் இருத்தல் உயர்வுடையதோ? அன்று!; நீ கூறுவாயாக.
முடிபு: தோழி, உழத்தலும் ஆற்றாம்; பெரும்பிறிதாகல் அதனினும்அஞ்சுதும்; நாடன் அஞ்சினன் கொல்? வரவறியான்; அது புரைத்தோ?அன்று; உரைத்திசின்.
கருத்து: தலைவனை நான் நினைந்திருத்தலையன்றி, அவன்வந்தானல்லன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 302. குறிஞ்சி - தலைவி கூற்று, இலக்கியங்கள், தலைவி, குறிஞ்சி, குறுந்தொகை, கூற்று, இருவரும், நாடன், வருதலை, அன்று, இன்னும், தோழி, உரைத்திசின், சங்க, எட்டுத்தொகை, தலைவன், புரைத்தோ, உழத்தலும், ஆற்றாம்