குறுந்தொகை - 296. நெய்தல் - தலைவி கூற்று
(பகற்குறிக்கண் இடையீடின்றித் தலைவனோடு அளவளாவும்நிலைபெறாத தலைவி வருந்தி, தலைவன் சிறைப்புறத்தானாக, தோழிக்குக்கூறுவாளாய், “நீ அவரைக் கழறுதலை யொழி” என்று கூறும் வாயிலாகத்தன் நிலையைப் புலப்படுத்தியது.)
அம்ம வாழி தோழி புன்னை அலங்குசினை யிருந்த அஞ்சிறை நாரை உறுகழிச் சிறுமீன் முனையிற் செறுவிற் கள்நாறு நெய்தல் கதிரொடு நயக்கும் தண்ணந் துறைவற் காணின் முன்னின்று |
5 |
கடிய கழறல் ஓம்புமதி தொடியோள் இன்ன ளாகத் துறத்தல் நும்மின் தகுமோ என்றனை துணிந்தே. |
|
- பெரும்பாக்கனார். |
தோழி! ஒன்று கூறுவன் கேட்பாயாக; புன்னையினது அசைந்த கிளையினிடத்திருந்த அழகிய சிறகையுடைய நாரை மிக்க கழியிடத்துச் சிறுமீன் உணவை வெறுத்ததாயின் வயலிலுள்ள கள் மணக்கின்ற நெய்தற் பூவை நெற்கதிரோடு விரும்புகின்ற தண்ணிய அழகிய துறைவனைக் கண்டால் அவன் முன்னே நின்று வளையை அணிந்த தலைவி இத்தன்மை யுடையளாகும்படி பிரிந்து செல்லுதல் உமக்குத் தகுமோ என்று துணிந்து கடுமையான சொற்களைக் கூறி இடித்துரைத்தலைப் பாதுகாப்பாயாக.
முடிபு: தோழி, துறைவற்காணின் முன்னின்று, “துறத்தல் தகுமோ?”என்றனை துணிந்து கழறல் ஓம்புமதி.
கருத்து: இங்ஙனம் பிரிந்து வருதல் பற்றித் தலைமகனை நீ கழறற்க.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 296. நெய்தல் - தலைவி கூற்று, தலைவி, இலக்கியங்கள், நெய்தல், தோழி, குறுந்தொகை, கூற்று, தகுமோ, அழகிய, பிரிந்து, துணிந்து, ஓம்புமதி, நாரை, எட்டுத்தொகை, சங்க, சிறுமீன், முன்னின்று, கழறல்