குறுந்தொகை - 290. நெய்தல் - தலைவி கூற்று
(தலைவன் பிரிந்த காலத்தில், “நீ ஆற்றி இருத்தல் வேண்டும் என்ற தோழிக்கு முன்னிலைப் புறமொழியாக, “காமத்தின் இயல்பு அறியாத வன்கண்ணர் அதனைத் தாங்கி ஆற்ற வேண்டுமென்கின்றனர்” என்று தலைவி கூறியது.)
காமந் தாங்குமதி யென்போர் தாம தறியலர் கொல்லோ அனைமது கையர்கொல் யாமெங் காதலர்க் காணே மாயிற் செறிதுனி பெருகிய நெஞ்சமொடு பெருநீர்க் கல்பொரு சிறுநுரை போல |
5 |
மெல்ல மெல்ல இல்லா குதுமே. | |
- கல்பொரு சிறுநுரையார். |
காம நோயைப்பொறுத்து ஆற்றுவாயாக என்று வற்புறுத்துவோர் அக் காமத்தின் தன்மையை அறிந்திலரோ? அத்துணை வன்மை உடையவரோ? யாம்! எம் தலைவரைக் காணேமானால் செறிந்த துயர் மிக்க நெஞ்சத்தோடு மிக்க வெள்ளத்தில் பாறையின் மேல் மோதும்சிறிய நுரையைப் போல மெல்ல மெல்ல இல்லையாவேம்.
முடிபு: காமம் தாங்குமதி என்போர், அஃது அறியலர் கொல்?மதுகையர் கொல்? யாம் காணேமாயின் இல்லாகுதும்.
கருத்து: தலைவரது பிரிவு நீட்டிப்பின் என் உயிர் நீங்கும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 290. நெய்தல் - தலைவி கூற்று, மெல்ல, இலக்கியங்கள், தலைவி, கூற்று, குறுந்தொகை, நெய்தல், யாம், மிக்க, கொல், தாங்குமதி, எட்டுத்தொகை, சங்க, கல்பொரு