குறுந்தொகை - 285. பாலை - தலைவி கூற்று
(தலைவன் கூறிச் சென்ற பருவம் கண்டு வேறுபட்ட தலைவியைநோக்கித் தோழி வற்புறுத்தினாளாக, அவளுக்கு, "தலைவர் கூறிய பருவம் இதுவே. யான் ஒவ்வொரு நாளும் அவர் வரவை நோக்கி நிற்கின்றேன்; அவர் வந்திலர்" என்று தலைவி வருந்திக் கூறியது.)
வைகல் வைகல் வைகவும் வாரார் எல்லா எல்லை எல்லையுந் தோன்றார் யாண்டுளர் கொல்லோ தோழி ஈண்டிவர் சொல்லிய பருவமோ இதுவே பல்லூழ் புன்புறப் பெடையொடு பயிரி யின்புற |
5 |
இமைக்கண் ஏதா கின்றோ ஞெமைத்தலை ஊனசைஇ யொருபருந் திருக்கும் வானுயர் பிறங்கல் மலையிறந் தோரே. |
|
- பூதத் தேவனார். |
தோழி! இனிய ஆண் புறா பல முறை புல்லிய புறத்தை உடைய பெண் புறாவை அழைத்து இமைப்பொழுதில் எத்தகைய இன்பத்தை உடையதாக ஆகின்றது! இங்ஙனம் அவைஇருப்பவும் ஞெமை மரத்தின் உச்சியில் இறந்தோரது தசையை விரும்பி ஒற்றைப் பருந்து இருக்கின்ற வானளவும் உயர்ந்த விளக்கத்தை உடைய மலையைக் கடந்து சென்ற தலைவர் நாள் தோறும் விடியற் காலம் நீங்கிப் பகல் வரவும் அப்பகல் காலத்தில் வந்திலர்; எல்லாப் பகலின் எல்லையாகிய இரவிலும் மீண்டு வந்து தோன்றார்; எங்கே இருக்கின்றாரோ? ஈண்டு இவர் சொல்லிய பருவம் இதுவே; இங்கே இவர் மீண்டு வருவேன் என்று சொல்லிய பருவம் இதுவே. பிறிதன்று.
முடிபு: தோழி, மலையிறந்தோர் வைகவும் வாரார்; எல்லைஎல்லையும் தோன்றார்; யாண்டுளர் கொல்? இவர் சொல்லிய பருவமோ இதுவே.
கருத்து: தாம் கூறிச் சென்ற பருவம் வந்த பின்பும் தலைவர் வந்திலர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 285. பாலை - தலைவி கூற்று, பருவம், இதுவே, தோழி, சொல்லிய, இலக்கியங்கள், தலைவி, கூற்று, வந்திலர், குறுந்தொகை, பாலை, தலைவர், தோன்றார், சென்ற, இவர், யாண்டுளர், உடைய, பருவமோ, மீண்டு, அவர், சங்க, எட்டுத்தொகை, கூறிச், வைகல், வைகவும், வாரார்