குறுந்தொகை - 284. குறிஞ்சி - தோழி கூற்று
(தலைவன் வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிந்த காலத்தில்,ஊரினர் அலரை அஞ்சிய தலைவியை நோக்கி, "இவ்வூரினர் அறிவிலர்போலும்!" என்று தோழி கூறியது.)
பொருத யானைப் புகர்முகங் கடுப்ப மன்றத் துறுகல் மீமிசைப் பலவுடன் ஒண்செங் காந்தள் அவிழும் நாடன் அறவ னாயினும் அல்ல னாயினும் நம்மே சுவரோ தம்மிலர் கொல்லோ |
5 |
வரையிற் றாழ்ந்த வால்வெள் ளருவி கொன்னிலைக் குரம்பையி னிழிதரும் இன்னா திருந்தவிச் சிறுகுடி யோரே. |
|
- மிளைவேள் தித்தனார். |
போர் செய்த யானையினது புள்ளியை உடைய முகத்தை ஒப்ப மன்றத்தின்கண் உள்ள பொற்றைக் கல்லின்மேல் ஒள்ளிய செங்காந்தள் மலர் பல ஒருங்கே மலர்கின்ற நாட்டை உடைய தலைவன் வாய்மையை உடையனாயினும் வாய்மையனல்லனாயினும் மலையினிடத்திலே தாழ்ந்து வீழ்கின்ற தூய வெள்ளிய அருவி யானது அச்சத்தைத் தரும் இலையால் வேய்ந்த குடிலின் அருகில் இறங்கி ஓடும் நமக்கு இன்னாதாகி இருந்த இச்சிற்றூர் இடத்திலுள்ளார் தலைவன் அங்ஙனம் இருத்தல் கருதி நம்மைப் பழிப்பார்களோ? அவர் தமக்கென்று ஓர் அறிவும் இல்லாதவர்களோ?
முடிபு: நாடன் அறவனாயினும், அல்லனாயினும், இச்சிறு குடியோர் நம் ஏசுவரோ? தம் இலர் கொல்லோ?
கருத்து: தலைவன் செயல் பற்றி நம்மை ஏசுவோர் அறிவில்லாதவர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 284. குறிஞ்சி - தோழி கூற்று, தலைவன், இலக்கியங்கள், தோழி, குறிஞ்சி, குறுந்தொகை, கூற்று, கொல்லோ, உடைய, னாயினும், சங்க, எட்டுத்தொகை, நாடன்