குறுந்தொகை - 28. பாலை - தலைவி கூற்று
(தலைவன் வரை பொருளுக்காகப் பிரிந்த காலத்தில், அவன் விரைந்து வாராமைபற்றிக் கவலையுற்ற தோழியை நோக்கி. “என் துன்பத்தை அறியாமல் துயில்கின்ற இவ்வூரின்றிறத்து யான் யாது செய்வேன்?” என்று தலைவி சினந்து கூறியது).
மூட்டு வேன்கொல் தாக்கு வேன்கொல் ஓரேன் யானுமோர் பெற்றி மேலிட்டு ஆஅ ஒல்லெனக் கூவு வேன்கொல் அலமரல் அசைவளி அலைப்பவென் உயவுநோ யறியாது துஞ்சும் ஊர்க்கே. |
5 |
- அவ்வையார். |
சுழலுதலை உடைய அசைந்து வருகின்ற தென்றல் காற்று வருத்தா நிற்க எனது வருந்துதலை உடைய காம நோயை உணர்ந்து கொள்ளாமல் கவலையின்றித் தூங்கும் ஊரில் உள்ளாரை யான் முட்டுவேனோ? தாக்குவேனோ? ஒரு தலைக்கீட்டை மேற்கொண்டு ஆவென்றும் ஒல்லென்றும் ஒலி உண்டாக கூப்பிடுவேனோ? இன்னது செய்வது என்பதை அறியேன்.
முடிபு: ஊரை முட்டுவேன் கொல்? தாக்குவேன் கொல்? கூவுவேன் கொல்? ஓரேன்.
கருத்து: என்னுடைய நோயைத் தாயர் முதலியோர் அறியாமையின் யான் ஆற்றேன் ஆயினேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 28. பாலை - தலைவி கூற்று, இலக்கியங்கள், தலைவி, யான், வேன்கொல், பாலை, கொல், கூற்று, குறுந்தொகை, உடைய, சங்க, எட்டுத்தொகை, ஓரேன்