குறுந்தொகை - 278. பாலை - தலைவி கூற்று
(தலைவன் பிரிந்திருந்த காலத்து, நீ ஆற்றுதல் வேண்டுமென்றுவற்புறுத்தும் தோழியை நோக்கித் தலைவி, "அவர் எம்மை நினையாதுகொடியராயினர்" எனக் கூறியது.)
உறுவளி உளரிய அந்தளிர் மாஅத்து முறிகண் டன்ன மெல்லென் சீறடிச் சிறுபசும் பாவையும் எம்மும் உள்ளார் கொடியர் வாழி தோழி கடுவன் ஊழுறு தீங்கனி உதிர்ப்பக் கீழிருந் |
5 |
தேற்பன ஏற்பன உண்ணும் பார்ப்புடை மந்திய மலையிறந் தோரே. |
|
- பேரி சாத்தனார். |
தோழி! ஆண் குரங்கு முதிர்ந்த இனிய பழங்களை மரத்தின்மேல் இருந்து உதிர்க்க அம்மரத்தின் கீழே இருந்து ஏற்பவற்றை ஏற்பவற்றைத் தின்னுகின்ற குட்டிகளை உடைய பெண் குரங்குகள் உள்ள மலையைக் கடந்து சென்ற தலைவர் மிக்க காற்றுக் கோதிய அழகிய தளிரை உடைய மாமரத்தினது தளிரைக் கண்டாற் போன்ற மெல்லிய சிறிய அடியை உடைய சிறிய பசிய தாது முதலியவற்றால் செய்த விளையாட்டுப் பாவையையும் எம்மையும் நினையார்; அவர் கொடுமையை உடையர்.
முடிபு: தோழி, மலையிறந்தோர் உள்ளார் கொடியர்.
கருத்து: தலைவர் எம்மை நினைந்திலர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 278. பாலை - தலைவி கூற்று, இலக்கியங்கள், தலைவி, தோழி, பாலை, குறுந்தொகை, கூற்று, உடைய, இருந்து, சிறிய, தலைவர், அவர், எட்டுத்தொகை, சங்க, எம்மை, உள்ளார், கொடியர்