குறுந்தொகை - 277. பாலை - தோழி கூற்று
(தலைமகன் குறித்துச் சென்ற பருவம் வருங்காலம் யாதென்று தோழி அறிவரை வினாவியது.)
ஆசில் தெருவில் நாயில் வியன்கடைச் செந்நெல் அமலை வெண்மை வெள்ளிழுது ஓரிற் பிச்சை ஆர மாந்தி அற்சிர வெய்ய வெப்பத் தண்ணீர் சேமச் செப்பிற் பெறீஇயரோ நீயே |
5 |
மின்னிடை நடுங்கும் கடைப்பெயல் வாடை எக்கால் வருவ தென்றி அக்கால் வருவரெங் காத லோரே. |
|
- ஓரிற் பிச்சையார். |
அறிவ! மின்னைப் போன்ற இடையை உடைய தலைவி நடுங்குதற்குக் காரணமான இறுதியில் மழையை உடைய வாடைக்கு உரிய காலம் எப்பொழுது வருவது என்பாயோ அப்போது எம்முடைய தலைவர் வருவர்!; குற்றமற்ற தெருவினிடத்தே நாய் இல்லாத அகன்ற வாயிலில் செந்நெற் சோற்று உருண்டையும் மிக வெள்ளிய நெய்யும் ஆகிய ஒரு வீட்டில் இடும் பிச்சையை பெற்று வயிறு நிரம்ப உண்டு அற்சிரக் காலத்திற்குரிய விரும்பத் தக்க வெப்பத்தை உடைய நீரை நீரைச் சேமித்து வைக்கும் செப்பில் பெறுவாயாக.
முடிபு: வாடை எக்கால் வருவதென்றி; அக்கால் எம் காதலோர்வருவர். நீ தெருவில் பிச்சையை மாந்தி நீரைப் பெறீஇயர்.
கருத்து: வாடை வீசும் பருவம் எப்பொழுது வரும்?
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 277. பாலை - தோழி கூற்று, இலக்கியங்கள், தோழி, வாடை, பாலை, குறுந்தொகை, கூற்று, உடைய, எக்கால், அக்கால், எப்பொழுது, பிச்சையை, தெருவில், எட்டுத்தொகை, சங்க, பருவம், ஓரிற், மாந்தி