குறுந்தொகை - 274. பாலை - தலைவன் கூற்று
(பொருள்வயிற் பிரியக் கருதிய தலைவன் பாலை நிலத்தின் வெம்மையை நினைந்து பின், "தலைவியின் இனிய தன்மைகளை நினைந்து செல்லின் அவ் வெம்மை தோற்றாது" என்று தன் நெஞ்சை நோக்கிக் கூறியது.)
புறவுப் புறத்தன்ன புன்கா லுகாஅய்க் காசினை யன்ன நளிகனி யுதிர விடுகணை வில்லொடு பற்றிக் கோடிவர்பு வருநர்ப் பார்க்கும் வன்கண் ஆடவர் நீர்நசை வேட்கையி னார்மென்று தணியும் |
5 |
இன்னாக் கானமும் இனிய பொன்னொடு மணிமிடை யல்குல் மடந்தை அணிமுலை யாக முயகினஞ் செலினே. |
|
- உருத்திரனார். |
நெஞ்சே பொன்னாலும் மணியாலும் இயற்றப்பட்ட அணிகளை அணிந்த அல்குலை உடைய தலைவியினது அழகிய நகிலை உடைய மார்பை நினைந்தேமாகிச் சென்றால் புறாவினது முதுகைப் போன்ற புல்லிய அடியை உடைய உகாய் மரத்தினது மணியைப் போன்ற செறிந்த பழங்கள் உதிரும்படி விடுகின்ற அம்பை வில்லோடு பிடித்து உயர்ந்த இடத்தின் மேல் ஏறி வழியிலே வருபவரைப் பார்க்கும் தறு கண்மையை உடைய ஆறலை கள்வர் நீரை விரும்புகின்ற வேட்கையினால் மரப் பட்டையை மென்று அவ் வேட்கை நீங்கும் இன்னாமையை உடைய காடுகளும் இனியவாகும்.
முடிபு: மடந்தை ஆகம் உள்கினம் செலின், இன்னாக் கானமும்இனிய.
கருத்து: தலைவியை மறவாது நினைத்திருப்பின் பிரித்து வருதல்கூடும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 274. பாலை - தலைவன் கூற்று, உடைய, பாலை, இலக்கியங்கள், தலைவன், குறுந்தொகை, கூற்று, இன்னாக், மடந்தை, பார்க்கும், நினைந்து, எட்டுத்தொகை, சங்க, இனிய