குறுந்தொகை - 260. பாலை - தோழி கூற்று
(தலைவனது பிரிவை ஆற்றாதிருந்த தலைவியை நோக்கி, "நன்னிமித்தங்கள் உண்டாகின்றன; ஆதலின் தலைவர் வந்து விடுவர்; நீ ஆற்றுக" என்று தோழி கூறியது.)
குருகும் இருவிசும் பிவரும் புதலும் வரிவண் டூத வாய்நெகிழ்ந் தனவே சுரிவளைப் பொலிந்த தோளுஞ் செற்றும் வருவர்கொல் வாழி தோழி பொருவார் மண்ணெடுத் துண்ணும் அண்ணல் யானை |
5 |
வண்தேர்த் தொண்டையர் வழையம லடுக்கத்துக் கன்றி லோரா விலங்கிய புன்றா ளோமைய சுரனிறந் தோரே. |
|
- கல்லாடனார். |
தோழி! நாரைகளும் கரிய வானத்தின்கண் உயரப் பறக்கும்; புதலிலுள்ள போதுகளும் கோடுகளை உடைய வண்டுகள் ஊதுவதனால் மலர்ந்தன; சுழித்த சங்காற் செய்த வளையினால் விளங்கிய தோள்களும் நெகிழ்ச்சி நீங்கி வளையோடு செறியும்; ஆதலின் பகைவரது பூமியைக் கொண்டு நுகரும் தலைமை பொருந்திய யானையையும் வளவிய தேரையுமுடைய தொண்டை மான்களுக்குரிய சுர புன்னைகள் நெருங்கிய மலைப் பக்கத்தில் கன்றில்லாத ஒற்றைப் பசுவை நிழலினால் தம்பால் வரச் செய்து தடுத்த புல்லிய அடியை உடைய ஓமை மரங்களை உடைய பாலை நிலங்களை கடந்து சென்ற தலைவர் வருவர்.
முடிபு: தோழி, குருகும் இவரும்; புதலும் நெகிழ்ந்தன; தோளுஞ்செற்றும்; சுரன் இறந்தோர் வருவர்.
கருத்து: நன்னிமித்தங்கள் உண்டாதலின் தலைவர் வருவர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 260. பாலை - தோழி கூற்று, தோழி, பாலை, இலக்கியங்கள், தலைவர், குறுந்தொகை, கூற்று, வருவர், உடைய, புதலும், குருகும், ஆதலின், எட்டுத்தொகை, சங்க, நன்னிமித்தங்கள்