குறுந்தொகை - 258. மருதம் - தோழி கூற்று
(பரத்தையிற் பிரிந்த தலைவனை நோக்கி, "தலைவி அழகிழந்தாள்!ஆதலின் நினக்கு ஆகும் பயன் ஒன்றில்லை; ஈண்டு வாரற்க" என்று தோழி வாயில் மறுத்தது.)
வாரலெஞ் சேரி தாரனின் றாரே அலரா கின்றாற் பெரும காவிரிப் பலராடு பெருந்துறை மருதொடு பிணித்த ஏந்துகோட் டியானைச் சேந்தன் தந்தை அரியலம் புகவி னந்தோட்டு வேட்டை |
5 |
நிரைய ஒள்வாள் இளைஞர் பெருமகன் அழிசி ஆர்க்கா டன்ன விவள் பழிதீர் மாணலந் தொலைதல் கண்டே. |
|
- பரணர். |
பெரும! காவிரி நதியினது பலர் நீராடுகின்ற பெரிய நீர்த்துறையின்கண் வளர்ந்த. மருத மரத்தில் கட்டிய மேல் உயர்ந்த கொம்பை உடைய யானைகளை உடைய சேந்தனுடைய தந்தையும் கள்ளாகிய உணவையும் அழகிய விலங்குத் தொகுதியை வேட்டையாடும் தொழிலையும் பகைவருக்கு நரக வாழ்வைப் போன்ற துன்பத்தைத் தரும் ஒள்ளிய வாளையும் உடைய இளைய வீரர்களுடைய தலைவனுமாகிய அழிசியினது ஆர்க்காடென்னும் நகரத்தைப் போன்ற இவளது குற்றந் தீர்ந்த மாட்சி மைப்பட்ட அழகு அழிதலைக் கண்ட பின் எமது சேரிக்கண் வருதலை யொழிவாயாக; நின் மாலையைத் தருதலை யொழிக; பழிமொழி உண்டாகின்றது.
முடிபு: பெரும, இவள் நலம் தொலைதல் கண்டு வாரல்; தாரல்.
கருத்து: நீ ஈண்டு வாரற்க.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 258. மருதம் - தோழி கூற்று, இலக்கியங்கள், தோழி, மருதம், உடைய, குறுந்தொகை, பெரும, கூற்று, தொலைதல், சங்க, எட்டுத்தொகை, ஈண்டு, வாரற்க