குறுந்தொகை - 2. குறிஞ்சி - தலைவன் கூற்று
(இயற்கைப் புணர்ச்சிக்கண் தலைவியின் கூந்தல் இயற்கை மணம் உடையது என்பதைத் தலைவன் வண்டை வினாவுதல் வாயிலாகப் புலப்படுத்தி நலம் பாராட்டியது.)
கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி காமம் செப்பாது கண்டது மொழிமோ பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல் செறியெயிற் றரிவை கூந்தலின் நறியவும் உளவோ நீயறியும் பூவே. |
5 |
- இறையனார். |
பூந்தாதை ஆராய்ந்து உண்ணுகின்ற வாழ்க்கையினையும் உள்ளிடத்தே சிறையையும் உடைய வண்டே என் நிலத்து வண்டாதலின் யான் விரும்பியதையே கூறாமல் நீ கண்கூடாக அறிந்த தையே சொல்வாயாக; நீ அறியும் மலர்களுள் எழுமையும் என்னோடு பயிலுதல் பொருந்திய நட்பையும் மயில் போன்ற மென்மையையும் நெருங்கிய பற்களையும் உடைய இவ்வரிவையின் கூந்தலைப் போல நறுமண முடைய பூக்களும் உள்ளனவோ?
முடிபு: தும்பி, நீ அறியும் பூக்களுள் அரிவையின் கூந்தலைப் போல நறியனவும் உளவோ? மொழிவாயாக.
கருத்து: தலைவியின் கூந்தல் இயற்கை மணம் உடையது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 2. குறிஞ்சி - தலைவன் கூற்று, இலக்கியங்கள், தலைவன், குறிஞ்சி, குறுந்தொகை, கூற்று, உளவோ, தும்பி, அறியும், கூந்தலைப், உடையது, உடைய, கூந்தல், எட்டுத்தொகை, சங்க, தலைவியின், இயற்கை, மணம்