குறுந்தொகை - 3. குறிஞ்சி - தலைவி கூற்று
(வரையாது ஒழுகும் தலைவன் வேலிப் புறத்தே நின்றதை அறிந்த தோழி அவன் வரைந்து கொள்ள வேண்டுமென்னும் எண்ணம் உடையவளாகி அவன் செவியில் படும்படி அவனது நட்பைப் பழித்துக் கூறிய போது, தலைவி அந்நட்பு மிகச் சிறப்புடையது என்று உணர்த்தியது.)
நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று நீரினும் ஆரள வின்றே சாரல் கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே. |
|
- தேவகுலத்தார். |
மலைப் பக்கத்தில் உள்ள கரிய கொம்புகளை உடைய குறிஞ்சி மரத்தின் மலர்களைக் கொண்டு பெரிய தேனை வண்டுகள் செய்தற்கு இடமாகிய நாட்டைஉடைய தலைவனோடு யான் செய்த நட்பானது பூமியைக் காட்டிலும் அகலம் உடையது; ஆகாயத்தைக் காட்டிலும் உயர்ந்தது; கடலைக் காட்டிலும் அளத்தற்கரிய ஆழம் உடையது.
முடிபு: நாடனொடு செய்த நட்பு, பெரிது; உயர்ந்தது; அளவினதுஎன்க.
கருத்து: தலைவனொடு செய்த நட்பு மிகச் சிறந்தது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 3. குறிஞ்சி - தலைவி கூற்று, இலக்கியங்கள், குறிஞ்சி, தலைவி, காட்டிலும், குறுந்தொகை, செய்த, கூற்று, உடையது, நட்பு, உயர்ந்தது, அவன், எட்டுத்தொகை, சங்க, மிகச், நாடனொடு