குறுந்தொகை - 18. குறிஞ்சி - தோழி கூற்று
(இரவில் வந்து மீளும் தலைவனுக்குத் தோழி, “தலைவியினது காமம் அவளால் தாங்கற்கு அரியதாதலின் விரைவில் வரைந்து கொள்ள வேண்டும்” என்பதைப் புலப்படுத்தியது.)
வேரல் வேலி வேர்க்கோட் பலவின் சாரல் நாட செவ்வியை ஆகுமதி யார தறிந்திசி னோரே சாரல் சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்கிவள் உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே. |
5 |
- கபிலர். |
சிறு மூங்கிலாகிய வாழ் வேலியை உடைய வேரிலே பழக்குலைகளை உடைய பலா மரங்கள் செறிந்த பக்கத்தை உடைய மலை நாடனே பக்க மலையில் பலாமரத்தின் சிறிய கொம்பில் பெரிய பழம் தொங்கியது போல இத்தலைவியினது உயிரானது மிகச் சிறுமையை உடையது; காமநோய் மிகப் பெரிது; அந்நிலையை அறிந்தவர் யார்? ஒருவரும் இல்லை; அவளை வரைந்து கொள்ளும் பருவத்தை உடையை ஆகுக.
முடிபு: நாட, இவள் உயிர் தவச் சிறிது; காமம் தவப் பெரிது; அஃது அறிந்திசினோர் யார்? செவ்வியை ஆகுமதி.
கருத்து: தலைவியை நீ விரைவில் மணம் புரிந்து கொள்ள வேண்டும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 18. குறிஞ்சி - தோழி கூற்று, இலக்கியங்கள், தோழி, குறிஞ்சி, குறுந்தொகை, கூற்று, உடைய, சிறிது, ஆகுமதி, யார், , செவ்வியை, பெரிது, வரைந்து, சங்க, எட்டுத்தொகை, காமம், விரைவில், கொள்ள, சாரல்